அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாகனத்தை முற்றுகையிட்டு ஒரு சிலர் போராட்டம் நடத்தி நிலையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒற்றை தலைமை யார் ?

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற முழக்கத்தின் காரணமாக பரபரப்பாக அரசியல் சூழ்நிலை மாறியுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மறைவிற்கு பிறகு சசிகலா சிறிது காலம் பொதுச் செயலாளராக இருந்தார். சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதிய பதவிகள் உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு இரட்டை தலைமை தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஒற்றை தலைமை கோஷம் மீண்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகள் பிரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 23 ஆம் தேதி அதிமுகபொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றவுள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்க நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

பாதுகாப்பு கேட்டு மனு

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி. எஸ் வர இருப்பதாக தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வாகனத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கார் மீதும் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்தநிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அ.தி.மு.க. பகுதி செயலாளர் பாலசந்திரன். ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்து விட்டு வெளியே வந்த நிர்வாகிகள் மீதும் அவர்களின் கார் மீதும் வேனில் வந்து இறங்கிய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் தலைமை நிர்வாகிகளை ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். . எனவே அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.