petition against ops and pandiarajanby dmk mla pitchandi

துணை முதல்வர் ஓபிஎஸ்., அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை முன்னாள் திமுக அமைச்சரும் எம்.எல்.ஏ.,வுமான கு.பிச்சாண்டி தாக்கல் செய்துள்ளார். 

அரசினை எதிர்த்து வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் இருவரும் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரண்டாகப் பிரிந்த அதிமுக.,வின் இரு அணிகள் பின்னர் இணைந்தன. ஆனால் இந்த இணைப்புக்கு முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது கடந்த பிப்ரவரி மாதத்தில், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்பொழுது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சி கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அந்த நேரத்தில் அதிமுக உறுப்பினர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், 'மாஃபா' பாண்டியராஜன் இருவரும் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். பின்னாளில் சமரசங்கள் ஏற்பட்டு இரு அணிகளும் இணைந்தன. ஓபிஎஸ்., துணை முதல்வராகவும். பாண்டியராஜன் கல்வித்துறை அமைச்சராகவும் ஆனார்.

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கொறடா உத்தரவை மீறி அவர்கள் செயல்பட்டதாகக் கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதே போன்ற நிலைதான் ஓபிஎஸ்ஸுக்கும் மாஃபா பாண்டியராஜனுக்கும் என்று கூறி, இன்று திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளார்.

அதில் அவர் கட்சிக் கொறடா உத்தரவினை மதிக்காமல், அரசினை எதிர்த்து வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் இருவரும் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும்? இவர்கள் இருவரும் அமைச்சராக செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கில் தமிழக ஆளுநர் மற்றும் சட்டப் பேரவை செயலர் இருவரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.