ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக போராட்டம் நடத்தும் இளைஞர்கள், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்தபோது ஏன் போராட்டம் நடத்தவில்லை ? என்று பீட்டா இந்தியா அமைப்பின் நிர்வாக அதிகாரி பூர்வா ஜோசிபுரா எரிச்சலுடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

லட்சக்கணக்கில் தமிழகம் முழுதும் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டம் மத்திய மாநில அரசுகளை மட்டுமல்ல பீட்டா நிர்வாகிகளையும் எரிச்சலடைய வைத்துள்ளது.

பீட்டா இந்தியா அமைப்பின் நிர்வாக அதிகாரி பூர்வா ஜோசிபுரா தனியார் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஜல்லிக்கட்டுத் தடைக்கு நாங்கள் காரணம் இல்லை. எங்களைப் போலவே பல அமைப்புகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. அதில் நாங்களும் ஒன்று. இந்திய சட்டப்படித்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் உரிமையை, பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

விலங்குகள்உரிமைகளை பாதுகாப்பதே பீட்டாவின் குறிக்கோள். நாட்டுக் காளைகளை காக்கத் தான் ஜல்லிக்கட்டு என்கிறார்கள். அதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்படும் நாட்டு மாடுகளை காக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

எங்களது அந்த முயற்சிக்கு நீங்களும் உதவ முன்வாருங்கள். அவைகளும் நாட்டு மாடுகள்தானே. இறைச்சிக்காக வும், தோல் போன்றத் தேவைகளுக்காகவும் அவைகள் கொல்லப்படுகின்றன. 

அதனுடன் ஒப்பிடும் போது ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பதால் நாட்டு மாடுகள் அழிவது குறைவுதான். இந்தியாவின் பிற மாநிலங்கள் நாட்டு மாடுகளை காப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்து ஆதாயங்கள் பெறுகின்றன. தமிழ் கலாசாரம் உயர்ந்தது. 

கொடுமை என்பது கொடுமைதான். கலாச்சாரம் அல்ல. கலாச்சாரத்தை பார்க்க வேண்டும் என்றால் முதலில் அரசியல் சட்டத்தைத் தான் பார்க்கவேண்டும். நமது அரசியல் அமைப்பு சட்டம், ஒவ்வொரு இந்திய குடிமகனும் விலங்குகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறது.

சட்டத்தை மதிப்பது நமது கடமை. சட்டத்துக்கு கட்டுப்படுவதே நமது கலாச்சாரம். தமிழ் கலாச்சாரம் என்பது மிகவும் உயரியது. யாரையும் புண்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். தமிழகத்தில் வறட்சியால் 144 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள்.?.

பீட்டாவுக்கு எதிராக கோபப்படுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. சட்டப்படித் தான் ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் மற்றும் காளைச்சண்டை தடை செய்யப்பட்டுள்ளது.