அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்டு ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கின் தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்டு ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கின் தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2 பேரும் யாருக்கு கட்சியில் பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் பெரும்பான்மையினரின் ஆதரவு எடப்பாடிக்கு இருந்தது. அவருக்கு 90 சதவீதம் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் குறைவான அளவிலேயே ஓபிஎஸ்க்கு ஆதரவு இருந்து வந்தது. அதே நேரத்தில் வருகிற 11ம் தேதி இன்று அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வந்து பொதுசெயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்படும் பொதுக்குழு சட்டப்படி செல்லாது. அதில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானமும் செல்லாது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்? பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் யார் கையெழுத்திடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கு இபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இபிஎஸ் தரப்பில் வாதிடுகையில்;- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. கட்சியின் விதிகளில் திருத்தம் செய்ய ஒட்டுமொத்த தொண்டர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உள்ளது. செயற்குழு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த போதும், பொதுக்குழுவின் முன்வைத்து ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டது. கட்சி விதிகளை திருத்த செயற்குழுவிற்கு அதிகாரம் இல்லை. செயற்குழு முடிவின்படி அடிப்படை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பருக்கு முன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை திருத்த செயற்குழு முடிவு செய்தது. செயற்குழுவுக்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்ய அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பில்;- 2021 டிசம்பர் செயற்குழு தீர்மானத்தின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றனர். அது தொடர்பான தகவல் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும். தலைவர்கள் உயிருடன் இல்லாதபோதுதான், பதவி காலியாக உள்ளது என கருத முடியும். அதிமுகவைப் பொறுத்தவரை, 1987 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இத்தகைய நிலை ஏற்பட்டது. மேலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தாலும், சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கூட்ட முடியும் என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை பொதுக்குழு நடைபெறும் நாளான இன்று காலை 9 மணிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கட்சி உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என தெரிவித்ததையடுத்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
