- Home
- Politics
- Annamalai: தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! அண்ணாமலை கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
Annamalai: தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! அண்ணாமலை கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
Annamalai New Party: பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி உள்ள நிலையில், அவர் புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் அந்த கட்சியில் இணைந்துள்ளனர்.

Annamalai New Party
பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகி இருப்பது தமிழக அரசியல் கரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பாஜகவில் இருந்து விலகிய உடனேயே, வீ த லீடர்ஸ் (We the Leaders) என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். அவரின் இந்த புதிய அரசியல் நகர்வு, அதன் பின்னணி கட்சியின் கொள்கைகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை
தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய முகமாக அறியப்பட்டவர் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜகவை குறிப்பிட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றார். சில காலமாக கட்சிக்குள் அவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், தேசிய தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார். டெல்லியில் அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்த பின்னர் அவர் இந்த முடிவை எடுத்தார்.
பாஜக தேசிய தலைமையுடன் கருத்து வேறுபாடு
தமிழ்நாட்டின் எதிர்காலம் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து பாஜகவின் தேசிய தலைமைக்கும், தமக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தான் பாஜகவில் இருந்த போது நான் பாஜகவை சேர்ந்தவனா அல்லது தமிழனா என்கிற மனப்போராட்டம் இருந்ததாகவும், 2025 டிசம்பர் மாதமே ராஜினாமா செய்ய முடிவு எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனது அரசியல் பயணத்தை கட்சியாக அறிவிக்காமல் வீ த லீடர்ஸ் என்கிற அரசியல் இயக்கமாக தொடங்கி இருக்கிறார்.
வரவிருக்கும் தேர்தலில் போட்டி
இந்த இயக்கம் விரைவில் பிராந்திய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் தனது கட்சி பங்கெடுக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மோடி நம்முடைய பிரதமர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். பிரச்சனை, பிரச்சனை என்று அவரை என்னால் தொடர்ந்து தொந்தரவு செய்ய முடியாது. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தன. எனவே கட்சியில் இருந்து விலக இருப்பதாக முன்கூட்டியே தலைமையிடம் தெரிவித்தேன். தேர்தலை முடித்துவிட்டு செல்லுங்கள் என்று கூறினார்கள். எனவே நான் பொறுமையாக இருந்தேன்.
18 மாதங்களாக விரக்தியில் அண்ணாமலை
தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தேன். பெருமைமிகு இந்தியன், பாரம்பரியமிக்க தமிழர் என்பதை எனது அடையாளம். நீங்கள் தமிழனா அல்லது இந்தியனா என்று கூட வடமாநிலத்தவர்கள் என்னை கேட்டார்கள். கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த சூழ்நிலையில் கட்சியில் இருந்து விலகும் முடிவு எடுக்க நேரிட்டது. புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு ஆரம்பிக்கிறேன். தமிழகத்தில் அடுத்த நடக்கும் பொதுத் தேர்தலில் நமது கட்சிப் போட்டியிடும். நிரந்தர எம்எல்ஏ, நிரந்தர அமைச்சர் என்பதை உடைக்க வேண்டும். பதவி என்பது ஒருவருக்கு மட்டுமே நிரந்தரம் இல்லை என்று அவர் கூறினார்.
கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் 5 லட்சம் உறுப்பினர்கள்
இந்த நிலையில் அண்ணாமலை தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை wetheleader.org என்கிற இணையதளம் மூலம் தொடங்கி இருக்கிறார். இணையதளம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் அந்த கட்சியில் இணைந்துள்ளனர். காலையில் கட்சி அறிவிப்பு வெளியான நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி சுமார் 5,43,000-க்கும் அதிகமானோர் கட்சியில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை என தமிழக அரசியல் இளைஞர்களின் பக்கம் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

