தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில்  நியுட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைக்கம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் கொண்டு வர சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்திற்காக மலையைக் குடைந்தால் அப்பகுதியில் உள்ள 12 அணைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடந்திருந்தார். முன்னதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காததால் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் பேரில், நியுட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. எனவே திட்டம் தொடங்க அனுமதிக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்தது. அதே நேரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக வனத்துறை ஆகியவற்றின் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதற்கு எதிர்ப்பு எதுவும் இருந்தால் உடனடியாக அது குறித்து புகார் அளிக்கலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.