அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிந்தது.

வழக்கம் போல் அமைச்சர்கள் அனைவரும் 4 மணி கூட்டத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட்டனர். அமைச்சர்கள் வரும் போது அவர்களின் ஆதரவாளர்கள் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அதேசமயம் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வரும் போது அவரது ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் திடீரென ஒரே நேரத்தில் திரண்டனர். அவர்கள் ஜெயலலிதாவின் வாரிசு ஓபிஎஸ் என்று முழக்கங்களை எழுப்பினர். மேலும் வருங்கால முதலமைச்சர் என்றும் மக்களின் முதலமைச்சர் என்றும் ஓபிஎஸ்சை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையின் போதும் வாழ்த்து கோஷங்கள் விண்ணை எட்டின. நிரந்தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். சிறிது நேரத்திற்கு முன்பு ஓபிஎஸ் வருகையின் போது வருங்கால முதலமைச்சர் என முழக்கம் எழுப்பப்பட்ட அதே இடத்தில் எடப்பாடி வருகையின் போது நிரந்தர முதலமைச்சர் என்று முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் உருவானது. ஆனால் முழக்கம் எழுப்பிய தொண்டர்கள் ஒருவருக்கு ஒருவர் சிரித்துக் கொண்டும் கைகளை குலுக்கிக் கொண்டும் ஒற்றுமையாகவே அங்கு இருந்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்த உடன் கூட்டம் துவங்கியது. வழக்கம் போல் ஜெயக்குமார் தான் பேசி கூட்டத்தை துவக்கி வைத்ததாக சொல்கிறார்கள். ஜெயக்குமார் பேசிய அனைத்து வார்த்தைகளும் அப்படி எடப்பாடி பழனிசாமி தரப்பின் வார்த்தைகளாகவே இருந்ததாக கூறுகிறார்கள். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும், இதற்கு ஒரு சிலர் ஒத்துழைக்க வேண்டும், விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்பன போன்ற கருத்துகளை அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாகவே கூறியுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் தற்போதைய அரசு தொடர வேண்டும் அதற்கு அண்ணன் ஓபிஎஸ், இபிஎஸ் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் என்று ஐஸ் வைப்பது போலவே பேசியுள்ளனர். ஆனால் அமைச்சர் ஒருவர், வெளிப்படையாகவே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்காமல் எப்படி மக்களை சந்திக்க முடியும், நமக்கு தற்போது ஒரு முதலமைச்சர் உள்ளார், மீண்டும் அவரை முதலமைச்சராக்குக்குங்கள் என்று கேட்காமல் எப்படி நாம் வாக்கு கேட்க முடியும் என்று அந்த அமைச்சர் கூற ஆலோசனை நடைபெற்ற அரங்கம் அப்படியே அமைதியாக இருந்துள்ளது.

இதன் பிறகு பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர், முதலமைச்சர் வேட்பாளர் ஒருபுறம் இருக்கட்டும். கட்சிக்கு பொதுச் செயலாளர் மிகவும் முக்கியம். எனவே  பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ்சை விட பொருத்தவமானவர் யாரும் இல்லை என்று அவர்கூற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தலைமை கழக நிர்வாகிகள் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை, பொதுக்குழுவை கூட்டி எந்த முடிவென்றாலும் அங்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மூத்த அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அதனை பற்றி பொருட்படுத்தாமல் வேறு சிலர் வேறு விஷயங்களை பேசியுள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஜெயக்குமார் அவசரமாக கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக சொல்கிறார்கள். ஆனால் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ள பொதுக்குழுவை கூட்டும் சூழல் தற்போது இல்லை என்பதால் முதலில் செயற்குழுவை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ந் தேதி செயற்குழு கூட்டப்பட்டு முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவி குறித்து முடிவெடுக்கப்படும் என்கிறார்கள். இந்த கூட்டத்தில் தங்கள் பலத்தை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே தயாராவார்கள் என்பதால் செயற்குழுவில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.