பெரியார் நடத்திய ஊர்வலத்தில்  இந்து கடவுள்களின்  சிலைகளை செருப்பால்  அடித்தது தான்தான் என அந்தப் பேரணியில் பங்கு பெற்ற பெரியாரின் தொண்டர் செல்வேந்திரன் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார் .  அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது , 1971ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் சேலம் போஸ் மைதானத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடந்தது .  அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் வாகனங்களில்  எடுத்துச்செல்லப்பட்டது இந்நிலையில் அந்த  சம்பவம் குறித்து ,  சமீபத்தில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ,  சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய பேரணியில் இந்துக் கடவுள்களான ராமர் சீதையின்  நிர்வாணமான உருவ படத்தை கொண்டுசென்று அதற்கு செருப்பு மாலைபோட்டு பெரியார் அவமதித்தார் என குற்றம் சாட்டியிருந்தார். 

 ரஜினியின் இந்த பேச்சு மிகுந்த சர்சையை ஏற்படுத்தியது,   திராவிடர் கழகம், அதிமுக ,  திமுக என திராவிட அரசியல் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினி  உண்மைக்குப் புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார் எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினர் .  ஆனால் தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி மறுத்துள்ளார் . இதனால்  இப்பிரச்சினை பூதாகரமாகியுள்ளது .  இந்நிலையில் பெரியார் நடத்திய பேரணியில்  நடந்த உண்மைகள் என்ன என்பது குறித்து அப்போது அப் பேரணியில் கலந்துகொண்ட பெரியாரின் தொண்டர்களில் ஒரவரான  திருச்சி செல்வேந்திரன் என்பவர் அச்சம்பவம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் ,  பெரியாரின் தலைமையில் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி சேலத்தில் நடைபெற்றது , அந்தப் பேரணிக்கு  முதலில் திமுக அரசு அனுமதி மறுத்தது . பிறகு தடையை மீறி அந்த பேரணி நடந்தது .

அதேநேரத்தில் எங்களின் பேரணிக்கு  எதிர்ப்பு தெரிவிக்க இந்து அமைப்பினர் மற்றும் சனாதன சங்கத்தினர் அனுமதி கேட்க அரசு அவர்களுக்கு உடனே அனுமதி வழங்கியது .  அப்போது எங்கள் பேரணி சென்றபோது இந்து அமைப்பினர் சாலையோரங்களில்  நின்றபடி எங்களுக்கு கருப்பு கொடி காட்டினர்.  அந்த பேரணியில்  ரஜினி சொல்வதுபோல  சிலைகளை நிர்வாணமாகவெல்லாம்  கொண்டுசெல்லப்படவில்லை.   எல்லா சிலைகளும் புத்தாடை அணிந்தபடி ஆடை ஆபரணங்களுடன் வந்தன .  அப்போது எங்கள் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த அமைப்பினர் எங்களின் மீது செருப்பை வீசினார் . அப்போது அந்த செருப்புகள்  அந்த சிலைகளின் மீது விழுந்தது .  சில செருப்புகள் எங்களையும் தாக்கியது .

 

அந்தக் கோபத்தில் எங்கள் மீது எறியப்பட்ட செருப்பை எடுத்து அந்த சிலைகளை நான் தாக்கினேன்  அவ்வளவுதான் நடந்தது ,  வேறு ஒன்றும் நடக்கவில்லை  என்றார் . ஆனால்,  ரஜினி கூறுவது போல நிர்வாணமாவோ செருப்பு மாலையுடனோ  சிலைகள் கொண்டு செல்லப்பட்டவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.   நிர்வாணமாக சிலைகள் கொண்டு செல்லப்படவில்லை என்றால் பிறகு ஏன் ரஜினி ஏன் இப்படி பேசுகிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ,  ரஜினி அரசியலுக்கு வர உள்ளதால் அரசியல் நோக்கத்திற்காக  இப்படி பேசுகிறார் என செல்வேந்திரன் ரஜினி குற்றம்சாட்டியுள்ளார் .