முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன், ரவிச்சந்திரன், சாந்தன்  ஆகிய 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் விடுதலை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் முடிவு எதையும் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

இந்நிலையில், வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பேரறிவாளன் தந்தையின் உடல் நிலையை கருத்தில்கொண்டு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

வரும் திங்கட்கிழமை அன்று பேரறிவாளன் பரோலில் வெளியே வர உள்ளார். ஏற்கனவே பேரறிவாளனுக்கு கடந்த வருடம் இரண்டு மாதங்கள் பரோல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.