தன்னிடம் 1,760000000000 க்கு சொத்து மதிப்பு இருப்பதாகவும் அதுபோக உலக வங்கியில் 4 லட்சம் கோடி கடன் கேட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்த பெரம்பூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் மனுவை ஏற்றுக்கொண்டு அவர் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி முடிய வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனு தாக்கலில் வேட்பாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் சேர்த்து மனுவைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் ஜே.மோகன்ராஜ் என்ற வேட்பாளர் தான் ‘ஜெபமணி ஜனதா’ என்ற கட்சியின் சார்பில் போட்டியிடுவதாகவும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதாகவும் வேட்பு மனுவுடன் இணைத்துத் தாக்கல் செய்யும் படிவம் 26இல் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தன் மனைவியிடம் 20,000 ரூபாய் ரொக்கமும், 2 லட்சத்து 50‌,000 ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் ‌நகையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் சவுத் இந்தியன் வங்கியில் 3 லட்ச ரூபாய் கடன் இருப்பதாக மோகன்ராஜ் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி உலக வங்கியிடம் 4 லட்சம் கோடி ரூபாய் கடன்கேட்டு  இருப்பதாகவும் த‌னது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.

ஆனால், வருமானத்துக்கு அதிகமான கணக்குடனும், தவறுதலாகவும் இருந்த அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு, அவருக்குப் பச்சை மிளகாய் சின்னமும் ஒதுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இது வேட்பு மனு பரிசீலனை நடைமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தனது யுடுப் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மோகன் ராஜ்,”தேர்தல் நடைமுறையில் எவ்வளவு குளறுபடிகள் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவே இவ்வாறு தவறான தகவல்களைத் தந்தேன். இங்கு வேட்பாளர்கள் காட்டும் சொத்துக்கணக்குகள் அனைத்துமே எப்படிப்பட்டவை என்பதற்கு என் மனுவே சாட்சி. இதற்காக என் மேல் வழக்குத் தொடர்ந்தால் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். இங்கு சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் அனைத்துமே தவறானவைதான்” என்கிறார்.