திமுகவுக்கு எதுக்கு ஓட்டு போட்டோம் என்று மக்கள் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. போட்டு தாக்கும் வானதி சீனிவாசன்.!
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல், முறைகேடுகளால் ஏற்பட்ட நஷ்டத்தை, சாதாரண மக்கள், தொழில் துறையினர் மீது சுமத்துவது ஈவு இரக்கமற்ற செயல். தி.மு.க. அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு மக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதான கொடூரத் தாக்குதல்.
திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல், முறைகேடுகளால் ஏற்பட்ட நஷ்டத்தை, சாதாரண மக்கள், தொழில் துறையினர் மீது சுமத்துவது ஈவு இரக்கமற்ற செயல் என கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தி.மு.க. அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது, பொதுமக்களுக்கு மட்டுமல்ல, குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினருக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், மாதம் ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு, கட்டணம் வசூலிக்கும்முறை அமல்படுத்தப்படும்" என, 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும், ஏழை, நடுத்தர மக்களுக்கு உண்மையிலேயே பலன் தரக்கூடிய, மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்குவது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால். தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்களே கடும் கோபத்தில் உள்ளனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள தி.மு.க. அரசு, மிகமிக அத்தியாவசிய தேவையான மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்த சில இடங்களில் மட்டும் கண் துடைப்புக்காக கருத்து கேட்புக் கூட்டங்களை மின் வாரியம் நடத்தியது.
அதில் பங்கேற்ற தொழில் துறையினர் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள், சமூக அமைப்புகள், தொழில்துறையினர் என அனைத்துத் தரப்பினரும், மின் கட்டணத்தை உயர்த்தவே கூடாது என வலியுறுத்தினர். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் இந்தச் சூழலில் மின் கட்டண உயர்வு என்பது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தும் என, குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர் தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், மக்கள் மீதும், தொழில் துறையினர் மீதும் கொஞ்சமும் அக்கறையில்லாத, மக்கள் விரோத தி.மு.க. அரசு, விடாப்பிடியாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அது அமலுக்கும் வந்துவிட்டது. மக்களின் கருத்துக்களை, ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றால் எதற்காக கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்?
மின் கட்டண உயர்வால் ஜவுளித் தொழிலை கடுமையாகப் பாதிக்கும் என, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா), தமிழ்நாடு ஒபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம் (ஓஸ்மா), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. மின் கட்டண உயர்வால் நூல் விலை கிலோவுக்கு ரூ. 5 அதிகரிக்கும் என்றும், 25,000 கதிர்கள் கொண்ட நூற்பாலைக்கு, ஆண்டுக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் வரை மின் கட்டண் உயரும் என்று ஜவுளி தொழில்துறை சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே, பருத்தி விலை உயர்வாலும், தட்டுப்பாட்டாலும் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. எனவே, இந்நிலைமை சீராகும் வரை, மின் கட்டண உயர்வை தள்ளி வைக்க வேண்டும். மின் கட்டண உயர்வால், சூரிய ஒளி, காற்றாலை போன்ற மரபுசாரா எரிசக்தி துறையில் புதிய முதலீடுகள் வருவதை பாதிக்கும். மின் கட்டண உயர்வால் தொழில்கள் நிறைந்த கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் போன்ற கொங்கு மண்டல மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, தொழில்துறையினருக்கு மட்டுமல்ல, வீடுகள், கடைகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மரபுசாரா மின் உற்பத்தியை அதிகரித்தல், மின் வாரியத்தில் ஊழல், முறைகேடுகளை தவிர்த்து நிர்வாகத்தை சீரமைத்தல், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்காமல் மின் உற்பத்தியை அதிகரித்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மின் வாரியத்தின் நஷ்டத்தை குறைக்க வேண்டும்.
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல், முறைகேடுகளால் ஏற்பட்ட நஷ்டத்தை, சாதாரண மக்கள், தொழில் துறையினர் மீது சுமத்துவது ஈவு இரக்கமற்ற செயல். தி.மு.க. அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு மக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதான கொடூரத் தாக்குதல். எனவே, மின் கட்டண உயர்வை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.