திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கட்சியுன் ஆட்சியை பொது மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். இந்தியாவிலேயே ஏழை, எளிய முதலமைச்சர் என பெயரெடுத்த மாணிக் சர்க்காரை அம்மாநில மக்கள் புறக்கணித்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அம்மாநிலத்தில்  25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடைப்றறு வந்தது.  மாணிக் சர்க்கார் முதலமைச்சராக இருந்து வந்தார்.

இந்நிலையில்  திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்ற 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பாஜகவும்  அதன் கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் சுய முன்னணியும் 40–க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருந்தன.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 20–க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 

ஓட்டுகள் தொடர்ந்து எண்ணப்பட்டபோது, ஆட்சி அமைக்க 31 இடங்கள் போதும் என்ற நிலையில் பாஜக 35 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது.

மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 16 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பாஜக  இங்கு ஆட்சியை கைப்பற்றுவது இதுவே முதல் முறை. .திரிபுரா மாநிலத்தில் 1993–ம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியே தொடர்ந்து வெற்றி கண்டு வந்தது.

இந்தியாவிலேயே எளிய மற்றும் ஏழை முதலமைச்சர் என பெயர் பெற்றவர் மாணிக் சர்க்கார். சொந்த வீடு கூட இல்லாமல் அரசு கொடுத்த வீட்டிலேயே இருந்து வந்தார். 

முதலமைச்சருக்கான தனது சம்பளத்தைக் கூட கட்சிக்காக கொடுத்து வந்தவர். 25 ஆண்டுகள் மக்களோடு மக்களாகவே வாழ்ந்து வந்தார்.

ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக, மாணிக் சர்க்காரின் அரசு மாநில வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை என பிரச்சாரம் செய்தது. மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவின் பிரச்சார பலம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவைத் தந்துள்ளது என கூறப்படுகிறது.

தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்துக்கு பாஜக  முடிவு கட்டியுள்ளது. இந்த வெற்றியை   பாஜக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.