people raised question against minister
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். 100வது நாளாக நடந்த போராட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட முயன்றபோது, போலீசார் நடத்திய துப்பாகி சூட்டில் 13 அப்பாவி பொது மக்கள் பலியாகினர்.
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். இந்த சம்பவம் நடைபெற்று இத்தனை நாட்கள் ஆன பிறகு, நேற்று தான் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது.
144 தடை உத்தரவை மதித்து பாதிக்கப்பட்ட மக்களை கூட சந்திக்காமல் இருந்ததாக தெரிவித்தனர், தமிழகத்தின் முதல்வரும் துணை முதல்வரும். இதனை தொடர்ந்து இன்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர்.
முதல் கட்டமாக தூத்துக்குடிக்கு இப்போது நியமிக்கப்பட்டிருக்கும் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம், சம்பவம் கூறித்து ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு, பின்னர் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர்
ஏற்கனவே நடந்திருக்கும் சம்பவங்களால் கடும் கோபத்தில் இருக்கும் மக்கள், இவர்கள் ஆறுதல் கூற வந்த போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றும் பாராமல் தைரியமாக கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதில் ஒரு பெண் ”எங்களை முட்டாளாக்க பார்க்காதீர்கள். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாமல் இருக்க ஆவண செய்யுங்கள் போதும். என கோபமாக பேசியிருக்கிறார்
அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பேசிய, போராட்டத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரும் “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர்களின் இந்த கேள்விக்கு உடனடியாக பதிலளிக்க இயலாமல் திண்டாடி இருக்கின்றனர் அமைச்சர்கள்.
