நினைப்பு பிழைப்பை கெடுத்ததாம்...நீராகாரம் உப்பை கெடுத்ததாம் என்ற பாணியில், ஜெயலலிதா போலவே, கொண்டை போட்டு, பச்சை புடவை கட்டி, அய்யங்கார் பொட்டு வைத்த சசிகலா, இன்று பெங்களூரு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

ஆனால், லேசான ஜெயலலிதா சாயலில் இருக்கும் அவரது அண்ணன் மக்கள் தீபா, தம்மை ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு, காரில் உட்கார்ந்த படியே ஒட்டு கேட்டு, போது மக்களிடம் வாங்கி கட்டி  கொண்ட கதைதான் இன்று மீடியாயாவில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, காரின் முன் இருக்கையில் அமர்ந்தபடியே தனது இரு விரல்களை காட்டி வாக்கு கேட்பார். முக்கிய இடங்களில் வாகனத்தை நிறுத்தி பேசுவார். அதை அனைத்து தரப்பு மக்களும் ரசிப்பார்கள்.

அதே பாணியில், ஆர்.கே.நகரில் போட்டியிடும் தீபா இன்று,  தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் பாலம் அருகில் காரில் அமர்ந்தபடியே  வாக்கு கேட்டார். 

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைக்கண்டு மிரண்ட, அவரது தொண்டர்கள், காரை விட்டு இறங்கி பிரச்சாரம் செய்யுமாறு தீபாவை கேட்டுக் கொண்டனர்.

அதனால், வேறு வழியின்றி, முணுமுணுத்தபடியே காரை விட்டு இறங்கிய தீபா, திறந்த வாகனத்தில் இருந்து வாக்கு கேட்க தொடங்கினார்.

மக்கள் செல்வாக்கு பெற்ற எந்த தலைவரும், மக்களை கண்டால், தலைக்குமேல் கையை தூக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு நலம் விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அதுவும் தேர்தல் நேரம் என்றால், தனியாக ஒருவர் நடந்து சென்றாலும் கீழே இறங்கி அவரிடம் பேசி வாக்கு கேட்பது வாடிக்கையான ஒன்று. 

ஆனால், தமது பலமே என்னவென்று தெரியாத நிலையில், முதன்முதலில் தேர்தலை சந்திக்கும் தீபா, தம்மை இப்போதே ஜெயலலிதா போல நினைத்துக் கொண்டால் எப்படி?  என அங்கிருந்த அவரது ஆதரவாளர்களே தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

நல்ல இருக்கும்மா..உங்க தேர்தல் பிரச்சாரம் என்று அங்கிருந்த தாய் குலங்களும் உதட்டை பிதுக்க ஆரம்பித்து விட்டார்களாம்.