தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,  வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு 11-9-2020 நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஈரோடு,  கிருஷ்ணகிரி,  தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்  வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சையும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாக கூடும். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் தேவலா (நீலகிரி) 21  சென்டி மீட்டர் மழையும்,  நாமக்கல் 13  சென்டி மீட்டர் மழையும், பெண்ணாகரம் (தர்மபுரி) அகரம் சிகூர் (பெரம்பலூர்) தல 8 சென்டி மீட்டர் மழையும், உளுந்தூர்பேட்டை, (கள்ளக்குறிச்சி) கலசபாக்கம், (திருவண்ணாமலை) சேந்தமங்கலம் (நாமக்கல்) செய்யாறு, (திருவண்ணாமலை) திருவள்ளூர், சின்னக்கல்லார்,(கோவை) வேப்பந்தட்டை. (பெரம்பலூர்) தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) குடியாத்தம் (வேலூர்) தல 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 14 வரை, கேரள கர்நாடக கடலோரப் பகுதிகளில் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 10, 11 தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 10 அன்று தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். தென் தமிழக கடலோரப் பகுதிகளில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 11-9-2020 இரவு 11:30 மணி வரை, கடல் உயர் அலை 3 மீட்டர் முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும், எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.