மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 7-12-2019 (இன்று) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

8-12-2010 தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்சை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணியாச்சி (தூத்துக்குடி) 16 சென்டிமீட்டர் மழையும், வைப்பார் (தூத்துக்குடி) 12 சென்டி மீட்டர் மழையும், கடம்பூர் (தூத்துக்குடி) 13 சென்டிமீட்டர் மழையும், கயத்தாறு (தூத்துக்குடி) சீர்காழி (நாகப்பட்டினம்) காரைக்கால், சித்தர் (கன்னியாகுமரி) தலா 9 சென்டிமீட்டர் மழையும், தலைஞாயிறு (நாகப்பட்டினம்) மயிலாடுதுறை வாலிநோக்கம் (ராமநாதபுரம்) நீடாமங்கலம் (திருவாரூர்) 8 சென்டி மீட்டர் மழையும், குடவாசல் (திருவாரூர்) மணல்மேடு (நாகப்பட்டினம்) பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 7சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.