திமுக எம்.பி. கனிமொழி தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல் கட்ட தேர்தல் பிரசார பயணம் சிறப்பாக இருந்தது. வரும் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.  தமிழகத்தில் வேலைவாய்ப்பே இல்லை. சுயஉதவிக் குழுக்கள் எல்லாம் கேட்பாரின்றி கிடக்கிறது. இது போன்று பல்வேறு நிலைகளில் மக்கள் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


எனவேதான் இந்த ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்புவது என மக்கள் காத்திருக்கிறார்கள். பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் அதிமுக ஆட்சி குறித்த புகார்களைதான் மக்கள் அதிகம் தெரிவித்தார்கள். இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தற்போது பொங்கலுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் எனச் சொன்னதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. நாடாளுமன்றத்தை பாஜக அரசு ஜனநாயக முறையில் நடத்துவதற்கு முன்வர வேண்டும்” என்று கனிமொழி தெரிவித்தார்.