Asianet News Tamil

மக்கள் நம் பக்கம்... முடிவு பண்ணிட்டாங்க..மூன்றாவது முறை நம்ம ஆட்சிதான்... தெறிக்கவிடும் ஈபிஎஸ் - ஓபிஎஸ்!

ஜெயலலிதாவின் அரசியல் பள்ளியில் பாடம் பயின்ற நம்மை இந்த பொய் பிரசாரங்களும், கருத்துத் திணிப்புகளும் என்ன செய்ய முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.
 

People are our side... next our ruling.. OPS-EPS confidence..!
Author
Chennai, First Published Apr 1, 2021, 8:53 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அதிமுக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அதில், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தேர்தல் களத்தில் கண்ட தொடர் வெற்றிகளை போன்றதொரு, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியினை அதிமுகவும், அதன் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் பெற்றிடவேண்டும் என்பதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அயராது பாடுபட்டு வரும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்புக்கும், விசுவாசத்துக்கும், அர்ப்பணிப்புக்கும் எப்படி நன்றி கூறுவது, என்ன வார்த்தைகளால் பாராட்டி மகிழ்வது என்று திகைத்து போயிருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று நாங்கள் 2 பேரும் தேர்தல் பிரசார பயணங்களை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடமெல்லாம் உற்சாகத்துடன் நீங்கள் ஆற்றும் பணிகளை பார்த்து ஆனந்தம் அடைகிறோம். பேரார்வத்துடன் பல்லாயிரக்கணக்கில் கூடி ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், இளம் பெண்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் எங்களை வரவேற்கும் காட்சியை விவரிக்க வார்த்தையே இல்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று ஆரூடம் சொன்னவர்களும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு நாள் தாங்குமா?, ஒரு வாரம் ஓடுமா?, இன்னும் ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும்; 2 மாதத்தில் கவிழ்ந்துவிடும்; 6 மாதத்தில் கவிழ்ந்துவிடும்; தீபாவளிக்குள் போய்விடும் என்றெல்லாம் ஆரூடம் கூறியவர்களின் மனக்கோட்டைகளைத் தகர்த்தெறிந்து, அவற்றையெல்லாம் தாண்டி அனைவரும் மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் வகையில் மிகச்சிறந்த ஆட்சியை மக்களுக்கு நாம் கொடுத்துள்ளோம். தற்போது தலைநிமிர்ந்து சென்று மக்களிடம் வாக்கு கேட்கிறோம்.
அதிமுக அரசின் சாதனைகளை கண்டு வியக்காதவர்கள் இல்லை. மூன்று புயல்கள், ஒரு பெருமழை, வெள்ளப்பெருக்கு; பருவம் தவறி பெய்த பேய் மழை, கடுமையான ஒரு வறட்சிக்காலம் என்ற இயற்கை பேரிடர்கள் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளித்து நிவாரண பணிகளை திறம்பட மேற்கொண்டோம். தமிழக மக்களின் இன்னல்களை களைந்தோம். உலகமே அஞ்சி நடுங்கி, செயலிழந்து, முடங்கி கிடக்கும் கொடிய கொரோனா பெருந்தொற்று நோயை சமாளித்து, போராடி, மக்களுக்கு இயன்ற வகைகளில் எல்லாம் உதவி செய்து, இன்று அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.
எண்ணற்ற வளர்ச்சி பணிகளை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு நம்முடைய அரசு வரலாற்றில் இடம்பெறும் அரசாகத் திகழ்கிறது. நாம் ஆற்றாத வளர்ச்சிப்பணிகள் உண்டா? மக்களுக்கு நாம் செய்யாத தொண்டு ஏதும் உள்ளதா? நன்றி உணர்ச்சிமிக்க நம் தமிழக மக்கள் 2011 முதல் அதிமுக அரசு ஆற்றி வரும் அரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், 2016-ல் தொடர் வெற்றியை அளித்தது போல, இப்பொழுதும் ஒரு மகத்தான வெற்றியை நமக்குத் தருவதற்கு மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை எங்களுடைய தேர்தல் பிரசார பயணங்களில் நாங்கள் சந்திக்கும் மக்கள் கூட்டமும், அதன் எழுச்சியும் எடுத்துக்காட்டுகிறது.
நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை, எங்கள் அனுபவம் எங்களுக்கு உணர்த்துகிறது. பல்வேறு வல்லுனர்கள், பொதுமக்கள் மூலம் எங்களுக்கு வருகிற தகவல்கள், அதிமுகவின் மீது மக்கள் பேரன்பு கொண்டிருப்பதையும், அந்த பேரன்பு அரசியல் ஆதரவாக மாறி வாக்குகளாக பொழியப்போகிறது என்றே கூறுகின்றன. பொய் பிரசாரங்களால் மக்கள் யாரும் தங்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவது இல்லை. ஜெயலலிதாவின் அரசியல் பள்ளியில் பாடம் பயின்ற நம்மை இந்த பொய் பிரசாரங்களும், கருத்துத் திணிப்புகளும் என்ன செய்ய முடியும்? தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நம் கட்சியினர் அனைவரும், கூட்டணி கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி, தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம். வெற்றி மாலையை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் சமர்ப்பிப்போம்.” என்று எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios