சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா, நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க நேரி வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜேயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

நீதிபதி குன்ஹா அளித்த சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முதல் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். 15-ம் தேதியுடன் சசிகலா சிறைக்கு வந்து 3 ஆண்டுகள் முடிவடைகிறது. ஆனால், இன்று வரை ரூ. 10 கோடி அபராதத்தை சசிகலா செலுத்தவில்லை. அவர் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்;- 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடியும் கடைசி நேரத்தில் கூட அவர் அபராத தொகையை செலுத்தலாம். கடும் அபராதம் விதிக்கப்பட்ட பெரும்பாலான குற்றவாளிகள் சிறைவாசத்தின் முடிவில் மட்டுமே பணம் செலுத்துகிறார்கள். சசிகலா வி‌ஷயத்தை பொருத்தமட்டில் அவர் காசோலை அல்லது வரைவோலை மூலம் மட்டுமே அபராதத் தொகையை செலுத்த வேண்டும். அந்த பணம் எவ்வாறு வந்தது, என்பதற்கு வருமான வரித்துறையிடம் ஆதாரத்தை காட்டி தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். அபராத தொகையை செலுத்தாவிட்டால் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அவர் மேலும் ஒரு ஆண்டு சினைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். 

அபராத தொகையை செலுத்தினால் அடுத்த ஆண்டு 2021 ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவார். அபராத தொகையை செலுத்தாவிட்டால் 2022-ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தான் அவர் விடுதலை செய்யப்படுவார். ஏற்கனவே வருமான வரித்துறை சோதனையில் சசிகலா குடும்பம் நொந்து நூலாகியுள்ளது. அவர்கள் குடும்பத்தார் கட்ட முடியாவிட்டால், உறவினர்கள், நண்பர்கள் பண உதவி செய்யலாம். ஆனால் அவர்களுக்கும் வருமான வரி பிரச்னை ஏற்படும் என்பதால், அவருக்கு பணத்தை கட்ட யாராவது முன் வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் அவர் அபராதத்தைக் கட்டுவாரா? அல்லது மேலும் ஓராண்டு தண்டனை அனுபவிப்பாரா என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.