“உடனடியாக இதை எல்லாம் அகற்றுங்கள்”... விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி...!
“விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிகளுக்கு இணையான இயக்கம். அதனால் கொடியை அகற்றுவதுடன்,கொடிக்கம்பத்தையும் மறைக்க வேண்டும்”
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் தங்களுடைய கொடிகளை அகற்ற வேண்டும் என்றும், கொடி கம்பங்களில் கட்சி நிறம் பூசப்பட்டிருந்தால் அது வெளியே தெரியாத அளவிற்கு மறைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிக்கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, கொடி கம்பங்களும் மறைக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளுக்காக அந்தந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வரைந்திருந்த சுவர் ஓவியங்களும் மறைக்கப்பட்டன. இதேபோல் பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கக் கொடியையும் அதிகாரிகள் அகற்ற வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு சம்மதிக்காத அதன் நிர்வாகிகள் விஜய் மக்கள் இயக்கம் ஒன்றும் அரசியல் கட்சி கிடையாதே?. எதற்காக கொடிகளை அகற்ற வேண்டும் எனக்கேட்டுள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் “விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிகளுக்கு இணையான இயக்கம். அதனால் கொடியை அகற்றுவதுடன்,கொடிக்கம்பத்தையும் மறைக்க வேண்டும்” எனக்கூறியுள்ளனர். அதன் பின்னரே நிர்வாகிகள் கொடிகளை அகற்றியதோடு, கொடிக்கம்பத்தையும் மறைத்துள்ளனர். தேர்தல் நடத்தை முறையில் எப்போதுமே ஒரு அரசியல் கட்சியின் கொடிகளை தான் அகற்ற உத்தரவிடப்படும். ஆனால் முதன் முறையாக பிரபல நடிகரின் சங்க கொடிகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.