தேவர் தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!
அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் தேவரின் உருவ சிலைக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இணைந்து வங்கியில் பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் தேவரின் உருவ சிலைக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார். இந்த தங்க கவசம் குருபூஜையின் போது முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.
பின்னர் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் பாதுகாக்கப்படும். இதற்காக அதிமுக, தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் கையெழுத்திட்டு தங்க கவசம் பெறப்படும். கடந்தாண்டு அதிமுக பொருளாளராக இருந்த ஓபிஎஸ் அப்பொறுப்பில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை எழுந்தபோது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்தாண்டு தேவர் குருபூஜை விழா அக்டோபர் 27 முதல் 30 வரை நடைபெறுகிறது. தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
மேலும் இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே வருகிற 10-ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுவாமிநாதன் ஏற்கனவே அதிமுகவின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தற்போதும் தங்க கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.