தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம் செய்வதில் பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டு பதிவில் தான் யாருக்கும் முட்டுகட்டை இல்லையென கூறியுள்ளார்.
புதிய நிர்வாகிகள் நியமனம்?
நாடாளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்று 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தனக்கான அணியை உருவாக்க பாஜக தலைவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக செயல்படாத நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில் பாஜகவை பொறுத்தவரை மாநில தலைவர் மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் முக்கிய பொறுப்புகளாகும். இந்த இடங்களில் 50 சதவகித மாவட்ட தலைவர்களை புதிதாக நியமிக்க மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். ஆனால் பாஜகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் தாங்கள் கூறும் நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களாக நியமிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இதன் காரணமாக இந்த பிரச்சனை டெல்லி மேலிடம் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி தாவ மாட்டேன்
இதனிடையே கட்சி நிர்வாகிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் நடிகை காயத்திரி ரகுராம் என்னை பதவியில் இருந்து நீக்கி, என்னை முடக்க வேண்டும் என்று திமுகவும், விசிகவும் மட்டுமே விரும்புகின்றன. என்னை பதவியில் இருந்து நீக்குவது பற்றி பாஜக நினைக்கவில்லை எங்கள் தலைவர் என்னை நீக்க மாட்டார். கடினமாக உழைத்தவர்களுக்கு பதவி உயர்வு மட்டுமே பாஜக தருகிறது. எனக்கு கட்சி பதவி இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்.. நான் கட்சி தாவ மாட்டேன்.. இன்னும் என் தேசத்திற்காக உழைப்பேன். நான் பாஜக மற்றும் மோடிக்கு வேலை செய்வேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது போன்று பல்வேறு பாஜக நிர்வாகிகள் தங்களுக்கு பதவி கிடைக்குமா? அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவோமா என்ற குழப்பத்தில் இருந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ஆலோசனை
இது தொடர்பான தகவல் காலை நாளிதழ் ஒன்றில் வெளியானது அதில் புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் பாஜக மூத்த தலைவர்கள் முட்டுகட்டை போடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஹெச்.ராஜவும் டெல்லி சென்றுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்ட ஹெச்.ராஜா நான் யாருக்கும் முட்டுக்கட்டையுமல்ல, கடந்த 3 நாட்களாக டில்லியில் முகாமிடவும் இல்லை, கடந்த 3 நாட்களாக வங்கி ஆடிட்டிங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கண்ணன் வாக்கு என கூறியுள்ளார். இதனிடையே பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒரிரு நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
