ஹெச்.ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தந்த விளக்கம்  காலதாமத விளக்கம் எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 

இந்நிலையில், பாஜக தொண்டர்கள் திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றினர். லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து ஹெ.ராஜா அந்த பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனாலும் கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, இதுகுறித்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் விளக்கம் தெரிவித்தார்.

பெரியார் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட கருத்து தன்னுடையது அல்ல எனவும் தனது அட்மின் எனக்கு தெரியாமல் செய்துவிட்டார் எனவும்  தெரிவித்தார். 

அவ்வாறு பதிவிட்ட அட்மினையும் அந்த பதிவையும் நீக்கிவிட்டதாக குறிப்பிட்டார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஹெச்.ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தந்த விளக்கம்  காலதாமத விளக்கம் எனவும் தெரிவித்தார். 

யாராக இருந்தாலும் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் கட்சியின் கருத்து ஆகாது எனவும் பொன்.ராதா குறிப்பிட்டார்.