திமுக கூட்டணிக்கு பாமகவும் வரும் பட்சத்தில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதால் ஆட்சியில் பங்கு என்கிற நிபந்தனையை முன்கூட்டியே முன்வைக்க கே.எஸ்.அழகிரி திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிகளில் இருந்தவர்களை ஒப்பிடும் போது கே.எஸ்.அழகிரியின் அரசியல் நகர்வுகள் கணிக்க முடியாததாக உள்ளது. காங்கிரஸ் எந்த கூட்டணியில் உள்ளதோ அதன் தலைவர்களை அனுசரித்து செல்வது தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் வேலையாக இருந்து வந்தது. கே.வி.தங்கபாலு, ஞானதேசிகன், ஈவிகேஎஸ், திருநாவுக்கரசர் என இதற்கு முன்பு தலைவர் பதவிகளில் இருந்த யாருமே திமுகவை மீறி அரசியல் செய்ய தயாராக இல்லை.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பிற்காக திமுகவிற்கு எதிராக பேசுவார் ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை சமயத்தில் அவரிடம் அந்த வீரியம் இருக்காது. ஆனால் கே.எஸ்.அழகிரி இந்த விஷயத்தில் கறார் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். வசந்தகுமார் ராஜினாமாவால் காலியான நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இதனை வெளிப்படையாகவே உதயநிதி பேசி வந்தார். நாங்குநேரியை திமுகவிற்கு காங்கிரஸ் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி கேட்டுக் கொண்டார்.

ஆனால் அதில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரியை பெற்றுக் கொடுத்தார் கே.எஸ்.அழகிரி. இதே போல் சட்டமன்ற தேர்தல் சமயத்திலும் திமுக கொடுக்கும் தொகுதிகளை பெற்றுச் செல்லும் நிலையில் அழகிரி இல்லை என்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கடந்த முறை ஒதுக்கியதை விட குறைவான தொகுதிகள் தான் ஒதுக்க வேண்டும் என்று திமுக வியூகம் வகுத்துள்ளது. இந்த வியூகத்தை உடைத்து திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் கே.எஸ்.அழகிரி உறுதியாக உள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தையின் துவக்கத்திலேயே கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சிக்கான வாய்ப்புகளை அதிகமாக்கும் வகையில் தேர்தலுக்கு பிறகு ஆட்சியில் பங்கு என்கிற நிபந்தனையை முன்வைப்பார் என்கிறார்கள். இதன் மூலம் திமுக தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இறங்கி வரும் என்பது கே.எஸ்.அழகிரியின் வியூகம் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 2006ம் ஆண்டு வெறும் 96 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆதரவுடன் ஐந்து ஆண்டு காலம் கலைஞர் முதலமைச்சராக இருந்தார்.

அந்த சமயத்தில் மத்தியில் காங்கிரஸ் அரசு நீடிக்க திமுகவின் தயவு தேவைப்பட்டது. இதனால் திமுக அரசியல் காங்கிரஸ் பங்கு கேட்கவில்லை. ஆனால் நிலைமை தற்போது அப்படி இல்லை. மத்தியில் மட்டும் அல்ல பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை இழந்துள்ளது. எனவே தமிழகத்தில் கூட்டணி அரசில் பங்கெடுப்பதன் மூலம் அகில இந்திய அளவில் காங்கிரசின் இமேஜை நிலை நிறுத்தவும் சட்டமன்ற தேர்தலை பயன்படுத்த அக்கட்சியின் மேலிடம் திட்டமிடும் என்கிறார்கள்.

கடந்த முறை திமுக ஆட்சியில் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கு கேட்கும் போதெல்லாம் மேலிடத்திடம் பேசி அதனை கலைஞர் சரி செய்துவிடுவார். ஆனால் தற்போது காங்கிரஸ் மேலிடம் ஆட்சியில் பங்கு என்கிற வாய்ப்பு கிடைத்தால் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவே விரும்பும். எனவே தான் ஆட்சியில் பங்கு என்கிற நிபந்தனையை கூட்டணி பேச்சின் போது கே.எஸ்.அழகிரி தயக்கம் இல்லாமல் முன்வைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்கிறார்கள். மேலும் இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தனிப்பட்ட முறையில் திமுகவில் இடம் இருந்து ஏதோ ஒரு வகையில் பலன் அடைந்து வந்தவர்கள் என்கிறார்கள்.

ஆனால் கே.எஸ்.அழகிரி அப்படி யாரிடமும் சென்று தனிப்பட்ட நலன்களுக்காக கை கட்டி நிற்காதவர் என்கிறார்கள். எனவே சட்டமன்ற தேர்தல் சமயத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சின் போதே தமிழக அரசியலில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.