அண்மையில் நடைபெற்ற  5 மாநில சட்டப் பேரைவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. அதுவும் 3 மாநிலங்களில் அக்கட்சி அட்சியை இழந்தது. இந்நிலையில் இந்த  ஆண்டு அம மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில் 5 மாநில சட்டப் பேரவைத்  தேர்தல் முடிவுக்கு பிறகு இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் சார்பில் கடந்த மாத இறுதியில்  நாடு முழுவதும் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் இப்போது தேர்தல் நடந்தால் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 257 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரியவந்துள்ளது.. இது பெரும்பான்மை பலத்துக்கு தேவையான 272 இடங்களை விட 15 இடங்கள் குறைவு ஆகும். இதுபோல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு (யுபிஏ) 146 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கு 140 இடங்கள் கிடைக்கும். இதில் சில கட்சிகளின் ஆதரவுடன்தான் மத்தியில் புதிய ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.

தமிழக நிலவரம் தொடர்பாகவும் கருத்து கணிப்பில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் அதிகமான இடங்களை கைப்பற்றி திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 39 தொகுதிகளில், திமுக 21 இடங்களில் வெற்றி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 3 இடங்களை கைபற்றும் என தெரிகிறது. அதேசமயம் அதிமுக 10 தொகுதிகளையும், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4 தொகுதிகளையும், பாமக ஓரிடத்திலும் வெற்றி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரை அங்குள்ள ஒரே தொகுதியை, பாஜக கூட்டணியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்  ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.