2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ஏப்ரல்,  மே மாதங்களில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணைய்ம தயாராகி வருகிறது.

தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவரும் காஷ்மீரில் சட்டசபை தேர்தலையும் நடத்த வேண்டி இருப்பதால், அங்கு நிலவும் சூழ்நிலையை ஆராய தேர்தல் ஆணை அதிகாரிகள் வரும் மார்ச் 4, 5ம் தேதிகளில் காஷ்மீர் செல்கின்றனர். அங்கு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் தவிர, ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் முறையே ஜூன் 18, ஜூன் 1, ஜூன் 11, மே 27 தேதிகளில் சட்டசபை பதவிக்காலம் முடிகிறது. இம்மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக அந்தந்த மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்து விட்டது

வரும் மார்ச் 6ம் தேதி அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றே, மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டத்தையும் மோடி நடத்த உள்ளார்..

தற்போது  நடக்கும் 16வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம்  முடிகிறது. இதையடுத்து வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த தேர்தல்  ஏப்.7ல் தொடங்கி மே 12 வரை 9 கட்டங்களாக நடந்தது. மே 16ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டன. இம்முறை 7 அல்லது 8 கட்டங்களாக தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 7 ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் ஒரே கட்டமாக நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும்   கூறப்படுகிறது.