நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தினகரன் தப்பு கணக்கு போட்டுவிட்டதாக சசிகலா டென்சனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தினகரன் மீதான எதிர்பார்ப்பு ஒரு சில கட்சிகளுக்கு இருந்தது. தேர்தல் கூட்டணி வைக்கும் அளவிற்கு தினகரனை உயர்வான நிலையில் தான் அவர்கள் வைத்திருந்தனர். ஆனால் ஓ.பி.எஸ்சை சந்தித்து பேசியதாக தினகரன் கூறியது முதல் அவர் மீதான எதிர்பார்ப்பு வேறு அரசியல் கட்சிகளுக்கு சுத்தமாக குறைந்துவிட்டது. அதுவும் எப்போது வேண்டுமானாலும் அ.தி.மு.கவுடன் தினகரன் சமரசம் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அதுமட்டும் அல்லாமல் கூட்டணிக்கு தான் தான் தலைவன் என்கிற ரீதியில் தினகரன் பேசிய பேச்சும் சில கட்சி தலைவர்களை யோசிக்க வைத்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு கூட்டணி தொடர்பாக தினகரனுடன் பேசிய சின்னஞ்சிறிய கட்சிகள் கூட ஒதுங்கி கொண்டன. இந்த நிலை மாறும் விரைவில் கூட்டணியை இறுதி செய்யலாம் என்று தினகரன் காத்திருந்து காத்திருந்து தற்போது ஓய்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தினகரன் தரப்பில் இருந்து சில சிறிய கட்சிகளை அணுகிய போது கடந்த வருடம் பாசிட்டிவாக பேசியவர்கள் தற்போது நெகடிவாக பேசுவதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலாவும் தினகரன் அ.தி.மு.கவுடன் சமரசம் செய்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க ஒன்றாகிவிட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே சசிகலா தினகரனின் அரசியல் நடவடிக்கைகளுக்கு அவ்வப்போது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த தகவல் அறிந்து அரசியல் கட்சிகள் தினகரனை அணுக மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பிரதான அரசியல் கட்சிகள் பலவும் தி.மு.கவுடன் கூட்டணியில் இணையவே நேரம் பார்த்து காத்திருக்கின்றன. பா.ம.க மட்டும் தான் கூட்டணி விவகாரத்தில் தடுமாறி வருகிறது. ஆனால் தினரகனுடன் கூட்டணி வைக்கும் விவகாரத்தில் பா.ம.க பெரிதாக எதையும் யோசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இப்படி அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வேறு திசையில் பயணிப்பதால் தினகரன் இருக்கும் திசையை நோக்கி யாரும் செல்லவில்லை. 

இதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கூட போட்டியிட அ.ம.மு.க தயார் என்று தினகரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறியுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு மத்தியில் 25 தொகுதிகளில் போட்டியிட அ.ம.மு.க முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார். திடீரென இந்த முடிவு மாற்றத்திற்கு அரசியல் கட்சிகள் யாரும் தினகரன் அணிக்கு வர விரும்பாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சசிகலாவும் கூட தினகரன் மீது டென்சனாக இருப்பதாக கூறப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க போட்டியிட்டு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் தினகரன் அரசியல் வாழ்க்கை மட்டும் அல்ல அ.தி.மு.கவை மீண்டும் கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் கனவிலும் மண் விழுந்துவிடும் என்பது தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.