திமுக சார்பில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் பேசும் குழுவுக்காக அக்கட்சியின் மேலிட அனுமதிக்காக தமிழக காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் பணிக்குழு, பிரசார குழு என பல குழுக்களை அமைக்க கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டார். தமிழகத்தில் ஒருங்கிணைப்பு குழு காங்கிரஸ் மேலிட தலைவர் முகுல்வாஸ்னிக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி.கள்  சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாணிக் தாகூர் உள்பட 10 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழுவுக்காக செல்லக்குமார், சி.டி.மெய்யப்பன், நடிகை குஷ்பு, ஆரூண், பீட்டர் அல்போன்ஸ், யசோதா உள்பட 20 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. பிரசார குழு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த பெயர் பட்டியல் ராகுல் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இதற்கான ஒப்புதலை ராகுல் காந்தி அளிப்பார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுவிட்டதால், காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவே பேச்சுவார்த்தையை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.