மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24 அன்று அதிமுக கூட்டணி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. அதிமுக - பாஜக இடையே இறுதிகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பாஜகவுக்கு 10 தொகுதிகளைக் கேட்டு அதிமுகவை பாஜக நெருக்கி வருகிறது.  தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கனவே அதிமுக தரப்போடு இரண்டு முறை பேசியிருக்கிறார்கள். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் தங்கமணி, வேலுமணியுடன் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். இரவு ஒரு மணி வரை  இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 

இந்நிலையில் பியூஷ் கோயல் இன்று சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக குழுவினருடன் அவர் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 24-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. எனவே அதற்கு முன்பாக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, அன்றைய தினமே கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடமும் வலியுறுத்தியுள்ளனர். 

அதன்படி தொகுதி உடன்பாட்டை துரிதமாக முடிக்கும்படி தொகுதி பங்கீட்டுக் குழுவினரிடம் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே வரும் 24-ஆம் தேதி அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுவிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.