நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தே.மு.தி.கவின் 10 சதவீத வாக்கு வங்கி அப்படியே உள்ளது என்று நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று அரசியல் காய்களை பிரேமலதா நகர்த்த ஆரம்பித்துள்ளார். 2005ம் ஆண்டு கட்சி துவங்கிய பிறகு விஜயகாந்த் 2006 சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2009 நாடாளுமன்ற தேர்தல்களை கூட்டணி இல்லாமல் தனித்து சந்தித்தார். இந்த தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் தே.மு.தி.கவின் வாக்கு வங்கி வளர்ந்து கொண்டே சென்றது. அதிலும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் அளவிற்கு தே.மு.தி.க வேட்பாளர்கள் வாங்கினர். 

இதன் மூலம் தே.மு.தி.கவிற்கு என்று 10 சதவீத வாக்கு உள்ளது, அந்த வாக்குகள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்கிற நிலைமை இருந்தது. இதனால் தான் 2011 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா துடியாய் துடித்தார். ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகளை விஜயகாந்த் வீட்டிற்கே அனுப்பி வைத்தார். 

இதற்கு கை மேல் பலனாக கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க 2011ல் ஆட்சியை கைப்பற்றியது. விஜயகாந்தும் கணிசமான அளவில் எம்.எல்.ஏக்களை பெற்றார். ஆனால் அதன் பிறகு விஜயகாந்த் போட்ட ஒரு சில தப்புக் கணக்குகளால் தே.மு.தி.க செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. விஜயகாந்த் போட்ட தப்புக் கணக்கு அரசியல் விவகாரங்களில் பிரேமலதாவை தலையிட அனுமதித்தது தான் என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் பிரேமலதா பேச்சை கேட்டே 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க – ம.தி.மு.க –பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தே.மு.தி.கவை களம் இறக்கினார் விஜயகாந்த். 

அந்த தேர்தலில் தான் விஜயகாந்திற்கு அரசியல் வாழ்வில் முதல் பேரிடி விழுந்தது. கூட்டணியில் இடம்பெற்று இருந்த பா.ம.க மற்றும் பா.ஜ.க தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தை பிடிக்கவே போட்டி போட வேண்டிய நிலையானது. இதன் பிறகும் கூட வாக்கு வங்கி அடிப்படையில் 2016 தேர்தலில் தே.மு.தி.கவிற்கு வழி மேல் விழி வைத்து தி.மு.க காத்திருந்தது. ஆனாலும் கூட பிரேமலதா பேச்சை கேட்டு மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். 

போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் தே.மு.தி.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்திற்கு 3வது இடம் தான் கிடைத்தது. மேலும் வாக்கு சதவீதமும் கூட 5 விழுக்காட்டிற்கும் கீழாக குறைந்து போனது. தற்போது தேர்தல் கூட்டணி குறித்து தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ம.க., பா.ஜ.க  ஆகிய கட்சிகள் பேசி வருகின்றன. ஆனால் கடந்த தேர்தலில் தே.மு.தி.கவிற்காக தேவுடு காத்த கட்சிகள் எதுவும் தற்போது அந்த கட்சியை சீண்ட கூட முன்வரவில்லை. இதற்கு காரணம் தே.மு.தி.கவின் வாக்கு வங்கி சரிந்து போனதாக பிற கட்சிகள் கருதுவதே ஆகும்.

 

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்கிற முடிவில் பிரேமலதா உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. 10 சதவீத வாக்குவங்கியை நிரூபித்து காட்டிவிட்டால் பிறகு வரும் சட்டமன்ற தேர்தலில் முன்பு போல் பேரம் பேச முடியும் என்றும் பிரேமலதா நம்புகிறார். இதனால் தான் பொருளாளர் பதவியை ஏற்றது முதல் மாவட்டம் தோறும் மறுபடியும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பிரேமலதா முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.