நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில், கட்சி தொடங்கி நடத்திவரும் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாகப் போட்டியிட மாட்டோம் என சொல்ல முடியாது. நிலைமையைப் பொறுத்து முடிவெடுப்போம்” என்றும் தெரிவித்தார். அண்மைக்காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேட்டியளித்த கமல்ஹாசன், “நாடாளுமன்றத் தேர்தலிலும் காலியாக உள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடுவோம்” என்று சொல்லிவந்தார். 

உச்சகட்டமாக கடந்த மாதம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த கமல்ஹாசன், ‘மக்களவைத் தேர்தலில் தானே களமிறங்கப் போவதாகவும்’ தெரிவித்தார். ஆனால், நேற்று கமல்ஹாசன் பேசிய பேச்சு பூடாகமாகவே வெளிப்பட்டிருக்கிறது. “நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாகப் போட்டியிட மாட்டாம் எனச் சொல்ல முடியாது” என கமல்ஹாசன் கூறியிருப்பதன் மூலம் தேர்தலில் களமிறங்கும் விஷயத்தில் அவர் ஊசலாட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது. 

மய்யத்தின் செயற்குழு கூட்டத்தில், “ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை கமலஹாசனுக்கு” வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தரப்பில் எந்த முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாயின. 

ஆனால், அந்தத் தகவல்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. தற்போதைய நிலையில் உறுதியான பலமான கூட்டணி அமைந்தால் மட்டுமே தேர்தலில் கமல்ஹாசன் பங்கேற்பார் என அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான், “நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாகப் போட்டியிட மாட்டாம் எனச் சொல்ல முடியாது” என கமலஹாசன் பேசியதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.