தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் அந்த 7 தொகுதிகள்!
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளையும் இறுதி செய்துவிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளையும் இறுதி செய்துவிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஏற்கனவே தி.மு.க கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவனுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. அதில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் எடுத்த முடிவு இறுதி முடிவு என்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் ஏற்கனவே ஏழு தொகுதிகள் தான் என்பது காற்று வாக்கில் கசிந்த தகவலாக இருந்தது. அந்த ஏழு தொகுதியைத்தான் தி.மு.க இறுதியாக காங்கிரசுக்கு என்று ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 25 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க போட்டி என்பதில் உறுதியாக உள்ள ஸ்டாலின் எந்த கட்சிக்கும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் இல்லை என்பதில் கவனமாக உள்ளார்.
அதனால் தான் வைகோவுக்கு 2, திருமாவுக்கு ஒன்று என தி.மு.க சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில் காங்கிரசுக்கு தமிழகத்தில் ஏழு தொகுதிகளிடும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் கொடுத்து எட்டு என்று செட்டில் செய்ய தி.மு.க ஆயத்தமாகியுள்ளது. அந்த வகையில் காங்கிரசுக்கு முதல் தொகுதியாக கன்னியாகுமரி ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகரை ம.தி.மு.க பெற்றுள்ளதால் காஞ்சிபுரம் காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கொங்குமண்டலத்தில் சேலம் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளது தி.மு.க மேலும் கடலூர் தொகுதியையும் தி.மு.க காங்கிரசிடமே கொடுக்க உள்ளது.
இதே போல் ப.சிதம்பரம் அல்லது அவரது மகனுக்கு சிவகங்கை தொகுதியும், திருநாவுக்கரசருக்கு ராமநாதபுரம் தொகுதியும் என்று தி.மு.க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எஞ்சிய ஒரு தொகுதியை திண்டுக்கல் அல்லது திருச்சியை கொடுத்து பைசல் பண்ணிவிடலாம் என்று திமுக கணக்கு போட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட தொகுதிகள் ஓ.கே ஆனால் எண்ணிக்கை தான் இடிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி மேலிடத்திற்கு புகாரை தட்டியுள்ளனர். அதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று மேலிடத்தில் இருந்து தமிழக காங்கிரசுக்கு தகவல் வந்துள்ளதாம்.