மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த எம்பிக்கள் போராட்டத்தில் அதிமுக, திமுக எம்பிகள் பரஸ்பரம் பேசி கொண்டனர்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், திமுகவின் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து, அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத பொதுமக்கள், தினமும் அதிகாலை முதல் இரவு வரை வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். வாசல்களில் தொடர்ந்து கால் கடுக்க காத்திருக்கின்றனர்.

புதிய திட்டம் அறிவித்து 3 வாரம் ஆனபிறகும், 500 மற்றும் 1000 நோட்டுகளுக்கு பதிலாக அடிக்கப்பட்டுள்ள 500, 2000 நோட்டுகளும் முழுமையான புழக்கத்துக்கு இதுவரை வரவில்லை. இந்த விவகாரம் சுமுக நிலையை அடைவதற்கு மேலும் சில வாரங்கள் ஆகலாம் என தெரிகிறது.

இந்த பிரச்சனையை மிகவும் தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போராடி வருகின்றன. குறிப்பாக நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கி வருகிறது.

இதேபோல், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டனர். இதன் முதல்கட்டமாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திரண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கைகளை கோர்த்தபடி மனிதச் சங்கிலியாக நின்றனர். சிலர் தரையில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிரான பல்வேறு கோஷங்கள் அடங்கிய அட்டைகளை அவர்கள் கையில் ஏந்தி இருந்தனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், ஜனார்த்தன் திவிவேதி, சத்யவர்த் சதுர்வேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓபிரையன், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா மற்றும் கனிமொழி, திருச்சி சிவா (தி.மு.க.) நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 200 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில், திமுக எம்பி கனிமொழி, அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கனிமொழி மற்றும் நவநீதகிருஷ்ணன் சிறிது நேரம் பரஸ்பரம் பேசி கொண்டாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து, கனிமொழி விசாரித்தாகவும், தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக, நவநீதகிருஷ்ணன் கூறியதாகவும் தெரிகிறது.