பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் ரூ.1,000 கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்பவுள்ளதாக மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கை கடந்த 6ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய கட்டடம் கட்டுவதற்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்த அனுமதி அளித்தது.

இத்தகைய சூழலில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான பூமி பூஜை விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாட்டின் 75-வது சுதந்திர தினம், வரும் 2022-ம் ஆண்டில் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள், மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க?  பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என தெரிவித்துள்ளார்.