குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா் சிறையில் அடைக்கப்படுவார்கள்   என்று உத்தரபிரதேச  அமைச்சா் ஓம் பிரகாஷ்   ராஜ்பர்   மிரட்டல் விடுத்திருப்பது  பொது மக்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும்  கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவின்     யோகி ஆதித்யாநாத் தலைமையிலான  அரசு நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் யோகி ஆதித்யநாத்தின்  அதிரடி நடவடிக்கைகள்  அம்மாநில பொது மக்களிடையே  பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், அரவது மதவாத நடவடிக்கைகள், மருத்துவமனைகளில்   குழந்தைகள் கொத்து கொத்தாக  மரணம் அடைந்தது,  தாஜ்மகாலை சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கியது  என  யோகி மக்களின்   அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில்  உ.பி. மாநில அமைச்சரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சராக   இருக்கும் ஓம் பிரகாஷ் ராஜ்பர்,      பாலியா மாவட்டத்தின் ராஸ்டா பகுதியில்  நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசினார். 

அப்போது ,  பள்ளிக்கு குழந்தைகள் வராவிட்டால் அவர்களது பெற்றோரை பிடித்து 5 நாள் சிறையில் அடைத்து வைப்பேன். என்றும், அவர்களுக்கு உணவு, குடிநீர் என எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்றும்    மிரட்டியுள்ளார்.

அதேபோல், உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் உங்களை காவல்துறையினா் பிடித்து சிறையில் அடைப்பார்கள். இதற்காக புதிய சட்டம் ஒன்றை இயற்றப் போவதாகவும், இதற்காக மரண தண்டனை கிடைத்தாலும் ஏற்க தயார் எனவும் ஓம் பிரகாஷ் ராஜ்பர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது.    

பின்னர் தனது கருத்து தொடர்பாக விளக்கம் அளித்த ஓம் பிரகாஷ் ராஜ்பர், குழந்தைகள் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்போது அவர்களை பள்ளிகளுக்கு அனுப்பாத பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. இதுதொடர்பாக நான் வெளியிட்ட கருத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு  சர்ச்சையை கிளப்பினாலும், பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.