வாரணாசி சென்ற பிரதமர் மோடிக்காக தேர்தல் பணியாற்றி வரும் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி எதிராக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னுடைய முதலமைச்சர் பதவியைக் கிட்டத்தட்ட தாரை வார்த்து தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பெற்றார் பன்னீர்செல்வம். ஆனால் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு பெரிய அளவில் எடுபடுவதில்லை. தேனி தொகுதியில் தனது மகனை வேட்பாளராக நிறுத்த கூட ஓ.பன்னீர்செல்வம் அதிகம் போராட வேண்டியிருந்தது. 

அதே சமயம் கொங்கு மண்டலத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி எம்பி சீட் வாங்கிக் கொடுத்துவிட்டார். இது போன்ற காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மிகுந்த எரிச்சலில் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் ஓபிஎஸ் தரப்புக்கு இன்ப அதிர்ச்சியாக வாரணாசி வருமாறு பாஜக மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்தது.

இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திரநாத் குமார் உடன் வாரணாசியில் முகாமிட்டுள்ளார். அங்கு பிரதமர் மோடிக்கு தேர்தல் பணியாற்றி வரும் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் குமாருக்கு பாஜக மேலிட நிர்வாகிகளுடன் நெருக்கம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனை பயன்படுத்தி தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவு பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். 

மறுபடியும் மோடி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் தான் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் காசியில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜையும் நடத்தியுள்ளார். வாரணாசியில் பிரதமர் மோடியின் மனம் கவரும் வகையில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தில் தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைக்கு ஓபிஎஸ் என் எண்ணமாக உள்ளது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்களே.