நான் பாஜகவில் இணையவுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள்தனமான கருத்து. தர்மயுத்தம் தொடங்கியதிலிருந்து அவர் கருத்துக்கு நான் பதில் சொல்வதே இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் உடனிருந்தார். இதுதொடர்பாக அமமுகவின் தங்கத்தமிழ் செல்வன், ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார். மேலும் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியையும், அவருக்கு ஆளுநர் பதவியும் கேட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதனையொட்டி அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓபிஎஸ் 'நான் பாஜகவில் இணையவுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள்தனமான கருத்து. தர்மயுத்தம் தொடங்கியதிலிருந்து அவர் கருத்துக்கு நான் பதில் சொல்வதே இல்லை என்று கூறினார். 

மேலும் அவர் பேசுகையில் ஒரு பக்கம் துரோகி, மறுபக்கம் எதிரி. இரண்டையும் நாம் தேர்தல் களத்தில் சந்தித்து வெற்றி பெற வேண்டிய சூழலில் இருக்கிறோம். எப்படி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நாம் பணியாற்றினோமோ, அதேபோல் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரை நினைவில் வைத்து பணியாற்ற வேண்டும் என்றார். தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.