அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் சிறந்த விசுவாசியாக இருந்த முதல்வர் பன்னீர் செல்வம் திடீரென அவருக்கு எதிராக எப்படி திரும்பினார்?, ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து, எப்படி தனது கல்லறை புரட்சியை தொடங்கினார்? என்பது அனைவரின் மனதிலும் மில்லியன் டாலர் கேள்வியாக இன்றும் தொடர்கிறது.
ஆனால், அதற்கு விடை கிடைக்கும் வகையில், ஓ.பி.எஸ்.க்கு நெருங்கிய வட்டாரங்கள் தரப்பில் இருந்து சில செய்திகள் வெளியாகி உள்ளன.

அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் இருந்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கண்காணிக்க அவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு சசிகலா தரப்பு உத்தரவிட்டது. ஓ.பன்னீர் செல்வம் எங்கு செல்ல இருக்கிறார்?, யாரை சந்திக்கிறார்?, யாருடன் பேசுகிறார்?, சாப்பாடு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அந்த அதிகாரி சசிகலா தரப்புக்குஅவ்வப்போது அளித்து வருவாராம்.
இந்நிலையில், சசிகலா முதல்வராகக் கூடாது, கட்சி ஒரு குடும்பம் கையில் சென்றுவிடக்கூடாது என்று மனதில் நினைத்து தனது திட்டத்தை செயல்படுத்த கடந்த 7-ந்தேதி அன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் களத்தில் இறங்கினார்.

தன்னைச் சுற்றி சசிகலாவுக்கு ஆதரவான பாதுகாப்பு படையின் பொறுப்பு அதிகாரி இருப்பதை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிந்து கொண்டு, மிகவும் ரகசியமாகவே காய் நகர்த்தியுள்ளார்.
7-ந்தேதி இரவு 8.30 மணி அளவில் தனது வாகனத்தில் ஏறினார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் முதல்வர் எங்கு செல்கிறார்? எனத் தெரியவில்லை. உடனடியாக ‘போயஸ் கார்டன் செல்லுங்கள்’ என்று ஓ.பி.எஸ். தனது டிரைவரிடம் கூறியுள்ளார்.
இதைப் பார்த்த சசிகலாவுக்கு ஆதரவான பாதுகாப்பு அதிகாரி, வழக்கமாக சசிகலாவுடன், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்கிறார் என நினைத்து கார்டனுக்கு தகவல் அனுப்பவில்லையாம்.
முதல்வர் வாகனத்தை தொடர்ந்து, பாதுகாப்பு வாகனமும் தொடர்ந்தது. ராதா கிருஷ்ணன் சாலையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கார் திரும்பும் சில மீட்டர் தொலைவு இருக்கையில், ‘வண்டியை நிறுத்துங்கள்’ , ‘போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் செல்லுங்கள்’, அதன்பின்,‘போயஸ் கார்டன் செல்லுங்கள்’ என முதல்வர் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.

இதனால், திடீரென திட்டத்தை மாற்றியதால், டிரைவரும், பாதுகாப்பு அதிகாரிகளும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். வாகனம் டி.ஜி.பி. அலுவலகம் நோக்கி சென்றபோது, அப்போதும் யாரும் எதிர்பாரா நிலையில், ‘வாகனத்தை ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி திருப்புங்கள்’ என்று ஓ.பன்னீர் செல்வம் டிரைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதைக் கேட்டு, அவர் திகைத்த டிரைவர் வாகனத்தை ஜெயலலிதா நினைவிடம் நோக்கி திருப்பினார், பாதுகாப்பு படையினரும் முதல்வர் வாகனத்தை பின்தொடர்ந்தனர்.
வாகனம் ஜெயலலிதா நினைவிடத்தில் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று கீழே விழுந்து வணங்கி, ஒரு சுற்று சுற்றி வந்தார். அப்போது முன்பே திட்டமிட்டது போல், ‘மலர்வளையத்துடன் ஓடிவந்து ஒருவர்’ முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் அதை கொடுத்தார். அதை புன்னகையுடன் பெற்றுக்கொண்ட ஓ.பி.எஸ். நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, தியானத்தில் ஆழ்ந்தார்.

இதைப் பார்த்தபின்தான் உளவுத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் அவசரமாக, கார்டனுக்கு தகவல்களை தெரிவித்து, சுதாரித்தனர் எனக் கூறப்படுகிறது.

ஏறக்குறைய 40 நிமிடங்கள் மவுனமாக, தியானத்தில் ஆழ்ந்துவிட்டு, எழுந்து தனக்கு நேர்ந்த அனைத்து விசயங்களையும் ஊடகங்களுக்குவெளிச்சம் போட்டு காட்டினார்.
