ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி எனவும் இதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்க உள்ளதாக  நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன் என ரஜினி உறுதிபடத் தெரிவித்தார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்ததை பலரும் வரவேற்றுள்ளனர். 

இதனிடையே, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினி கட்சி தொடங்கியுள்ளதை வரவேற்கிறேன். அவரது வரவு நல்வரவாகட்டும். அரசியலில் எதுவும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியுடன் அதிமுக கூட்டணி அமையலாம் என தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;-  நடிகர் ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியுடன், வாய்ப்பு இருந்தால் அதிமுக கூட்டணி அமைக்‍கும் என ஓ.​பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து கூறியுள்ளார். ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஊழல் என்று ரஜினி கூறுவது திமுகவைத்தான்; கட்சி ஆரம்பிப்பது அவரவர் உரிமை. மேலும், பரபரப்புக்காக கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார் என்றார்.