தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 23-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 37 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

இந்நிலையில், இவரது வெற்றியை எதிர்த்து தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பணப்பட்டுவாடா செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் அதனால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வாக்காளர் மிலானி என்பவர் புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ரவீந்திரநாத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியும் 4 மாதங்களாக பதிலளிக்கவில்லை. பதவி பறிப்போகும் என்ற அச்சத்தில் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார்.  எனவே, தற்காலிகமாக அவரது எம்.பி பதவியை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் பதில் மனு தாக்கல் செய்ய ஜனவரி 23-ம் தேதி வரை கடைசி கெடு விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.