மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதிக்கு பேரவையில் ஓபிஎஸ் இரங்கல் தீர்மானம் முன்மொழிந்து பேசியுள்ளார். 94 ஆண்டுகள் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர் கருணாநிதி என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். 

இது குறித்து அவர் பேசும் போது "மனஉறுதி, எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், அழகு தமிழால் அனைவரையும் அரவணைத்தவர், அரசியல் மாற்று கருத்து கொண்டவர்களையும் அவரது தமிழால் ஆட்கொண்டவர் கருணாநிதி. அவரது மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை. 

சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் மற்றும் சமூக நீதிக்காக போராடியவர் கருணாநிதி. பல பதவிகளை வகித்த கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும், கருணாநிதி மீது கருத்து வேறுபாடு இருந்தாலும், கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர்.

பச்சை தமிழர் பன்னீர்செல்வம் என கருணாநிதி கூறியது இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதி பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பி" என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.