அவெஞ்சர்ஸ்...திரைப்படத்தின் கிளைமேக்ஸ் நொடிகள் போல் நகர்ந்து கொண்டிருக்கின்றன தமிழகத்தின் இன்றைய தருணங்கள். காரணம்?...’தர்ம யுத்தம்’ துவக்கியபோது கொறடா உத்தரவை மீறி அ.தி.மு.க. அரசுக்கு எதிராக, பன்னீர் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் வாக்களித்தார்கள். ஆனால் சில மாதங்கள் கழித்து மீண்டும் ஆளும் அணியுடன் இணைந்து துணை முதல்வராகவே ஆகி முரண்பாட்டின் மூட்டையாக மாறினார் பன்னீர் செல்வம்.

இந்நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பன்னீர் அணி நடந்து கொண்ட விவகாரத்தை அடிப்படையாக வைத்து வழக்கொன்றை தொடுத்தார் தி.மு.க.வின் எம்.எல்.ஏ. சக்கரபாணி.  அந்த அதி முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு.

கொறடா உத்தரவையும் மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த காரணத்தால் சட்டப்படி பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரின் எம்.எல்.ஏ. தகுதி பறிக்கப்படும் என்றே சீனியர் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் பன்னீர் அணிக்கு ஆதரவு தீர்ப்பும் வரலாம் என்றும் கருத்து நிலவுகிறது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு நெருங்கும் நிலையில் திவாகரன் - தினரனுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் திடீர் மோதல் என்பதே ஒருவித நாடகமாகவும், இந்த தீர்ப்பை ஒட்டியும் பார்க்கப்படுகிறது.

இந்த தீர்ப்பானது பன்னீர்செல்வத்தின் அரசியல் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. ஒருவேளை அவருக்கு எதிர்மறையாக  தீர்ப்பு வந்தால் துணை முதல்வர், எம்.எல்.ஏ. ஆகிய பதவிகளை இழக்கும் அவர் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தில் உட்காரலாம். ஆனால் எடப்பாடி அணிக்கும், பன்னீர் அணிக்கும் மன ரீதியாக பிணைப்பு ஏற்படாத நிலையில் எல்லா அதிகாரங்களும் பறிபோன நிலையில் பன்னீரை அந்த பதவியில் தொடர விடுவார்களா எதிரணியினர்? என்கிற கேள்வியும் எழுகிறது.

அப்படியொரு நிலை வந்து உள்கட்சியில் கடும் நெருக்கடிக்கு ஆளானால் அரசியலையே வெறுத்து மீண்டும் தன் சொந்த ஊரான தேனிக்கே சென்றுவிடுவார் பன்னீர் என்கிறார்கள்.ஆனால் தமிழக அரசை மத்திய அரசு இயக்குவதால் இந்த தீர்ப்பின் முடிவு பன்னீருக்கு சாதகமாக அமையலாம், அதன் மூலம் அ.தி.மு.க.வில் பெரும் குழப்ப நிலை தவிர்க்கப்பட்டு ஆட்சியும் காப்பாற்றப்படலாம். இதன் மூலம் பன்னீர்செல்வம் மீண்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே துணை முதல்வராக தொடர்வார் என்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் பன்னீர் எங்கே இனி இருக்கப்போகிறார்? தேனியிலா, ராயப்பேட்டையிலா அல்லது ஜார்ஜ் கோட்டையிலா? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிய இருக்கிறது.