ஆகஸ்ட் 20ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம், 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அழகிரியால் திமுகவில் உட்கட்சி பூசல், அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கின் இறுதி கட்ட விசாரணை, உள்ளாட்சி தேர்தல் என அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால், அதிமுக செயற்குழு கூட்டம் 20ம் தேதியிலிருந்து 23ம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழோடு, தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதிமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதற்கு என்ன காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தவிர்க்க முடியாத காரணங்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

அதிமுக செயற்குழு கூட்டம் என்ன காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது என்ற கேள்விக்கு, சிறிது நேரம் யோசித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், காரணம் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் அறிக்கையில் காரணம் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.