ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் என்ன செய்திருப்பாரோ அதை பன்னீர்செல்வத்தை செய்ய வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! என்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர் தலைகள். ஆம், ஓ.பன்னீரின் கையாலேயே அவரது தம்பி ஓ.ராஜா வை கட்சியிலிருந்தே நீக்கியிருக்கும் நடவடிக்கையைதான் இப்படி கொண்டாடுகிறார்கள். அதேவேளையில் ’கட்சியிலிருந்து ராஜாவை நீக்கிவிட்டதால் மட்டும் பன்னீரின் கரங்கள் சுத்தமடைந்துவிடவில்லை. அவர் மகன் ரவியின் செயல்பாடுகள் கட்சியின் பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும்.’ என்று அடுத்த வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.  

என்ன பிரச்னை?... மதுரை ஆவின் சேர்மனாக நேற்றுதான் அவசர அவசரமாக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியான ஓ.ராஜா. அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போன்ற முக்கியஸ்தர்கள் அவருக்கு சால்வை அணித்து சிரித்துவிட்டு நகர்ந்த அடுத்த கொஞ்ச நேரத்தில் ஓ.ராஜாவை கட்சியிலிருந்தே நீக்கிய அறிவிப்பு வெளியானது. ராஜா மீது தொடர்ந்து பெருகி வரும் புகார்களால் கட்சிக்கும், துணை முதல்வரின் பதவிக்கும் அவப்பெயர் கூடிக் கொண்டே வந்ததன் காரணமாகவே இந்த அதிரடி! என்கிறார்கள். 

கழகத்தின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தை இப்படியொரு நடவடிக்கையை எடுக்க வைத்ததே முதல்வர் எடப்பாடியாரும், அவரது ஆதரவு அமைச்சர்களும்தான் என்கிறார்கள். என்ன நடந்தது? என்று உள்வட்டாரங்களிடம் கேட்டபோது....”சசிகலா குடும்பத்தை எதிர்கட்சிங்க ‘மன்னார்குடி மாஃபியா குடும்பம்’ அப்படின்னு திட்டுறதை வழக்கமா வெச்சிருந்தாங்க. அம்மா இறப்புக்கு பிறகு நடந்த நிகழ்வுகள் மூலம் சசி குடும்பத்தை கட்சியை விட்டே விலக்கி வெச்சிருக்கும் நாங்களும் இப்போல்லாம் அந்த குடும்பத்தை ‘மன்னார்குடி மாஃபியா’ன்னுதான் அழைக்கிறோம்.

 

கழக பெயரை கெடுக்கும் வகையில் சசி குடும்பம் ஆடிய சதிராட்டங்களுக்கு தண்டனையாகதான் இந்த கெட்ட பெயரை அது தாங்கி நிற்குது. ஆனால், சசியை குற்றம் சாட்டும் எங்கள் தரப்பிலும் அதே மாதிரியான அட்டூழியங்கள் செய்யும் குடும்பம் ஒன்று இருந்தால் அதை எப்படி அனுமதிப்பது? பன்னீரின் குடும்பத்தைத்தான் சொல்றோம். 

இப்போது நீக்கப்பட்டிருக்கிறாரே ஓ.ராஜா, இவர் அம்மாவின் பழைய ஆட்சியின் போதே பெரும் ஆட்டம் போட்டவர். பூசாரி நாகமுத்து என்பவரை தற்கொலைக்கு தூண்டியதான வழக்கு பல காலமாக இவரது காலை பாம்பாக சுற்றியுள்ளது. ஆனாலும் அண்ணன் இருந்த தைரியத்தில் பிழைத்து வந்தார். ஆனால்  அம்மா இறப்புக்குப் பின் பன்னீர்செல்வம் யுத்தம் செய்து பின் சமாதானமாகி, துணை முதல்வரான பின் ஓ.ராஜாவின் ஆட்டம் பெரிதாய் அதிகரித்துவிட்டது.  

தேனி மாவட்டத்தின் ஆற்றுப் படுகைகளில் லாரி லாரியாய் மணல் திருடுகிறார் பன்னீர் தம்பி ராஜா. இதற்கு எதிராக குரல் கொடுத்த பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகி தாக்கப்பட்டதோடு, ‘ராஜா அண்ணனை பகைச்சேன்னா இருக்கமாட்டல’ என்று கொலை மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார். கூலிப்படையை கொண்டு அவரை தாக்கியது ராஜாவின் வேலைதான். ராஜாவின் மணல் திருட்டு வேலையும், அதை எதிர்ப்பவர்களை கூலிப்படை கொண்டு விரட்டும் செயலும் தென் மாவட்டத்தில் பன்னீர் செல்வத்தின் மீதும் , கட்சியின் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தம்பிதான் இப்படி என்றால் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும் இதே ரூட்டில்தான் வில்லங்கம் வளர்க்கிறார். திருநெல்வேலியில் உள்ள தனது மாமனார் ஊரின் அருகே ஓடும் தாமிரபரணி ஆற்றில் இருந்து ரவி தரப்பு மணல் கடத்தி விற்கிறது. தினமும் லாரி லாரியாய் பல லோடுகளை கடத்தி, பணத்தை அள்ளிக் குவிக்கிறார். இந்த திருட்டுத்தனம் சமீபத்தில் போட்டோ மற்றும் ரவியின் பெயரோடே வெளியாகியது. துணை முதல்வரின் மகனே இப்படி செய்வதால் எங்களால்  தடுக்க முடியல! என்று அதிகாரிகள் அழுகின்றனர். 

ஆக மொத்தத்தில் தென் தமிழ்நாடு முழுக்க துணை முதல்வர் பன்னீரின் குடும்பம் அசிங்கப்பட்டு கிடப்பதோடு, அவரால் கட்சியின் பெயரும் களங்கப்பட்டு நிற்கிறது. மணல் திருட்டு, கூலிப்படை ஏவுதல், தற்கொலை, கொலை மிரட்டல் அப்படின்னு சகல அட்ராசிட்டி விஷயங்களிலும், புகார்களிலும் பன்னீரின் குடும்பத்தினரின் பெயர் வெளிப்படையாக அடிபடுவதால் தெற்கே கட்சியின் நிலை சீரழிகிறது. இதனால்தான் ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தை ‘தேனி மாஃபியா’ என்று அழைக்கிறோம். ” என்கிறார்கள். 

ஆனால் பன்னீர்செல்வத்தின் தரப்போ, ‘புகார் என்று வந்தவுடன், சொந்த தம்பி என்றும் பாராமல் கடும் நடவடிக்கை எடுத்து தன் நேர்மையை நிலைநாட்டியுள்ளார் பன்னீர்செல்வம். அவரது மகன் ரவி, மணல் திருட்டில் ஈடுபடுகிறார், அவரது குடும்பத்தினர் அட்ராசிட்டி செய்கின்றனர் என்று கிளப்பிவிடுவதெல்லாம் வெற்று வதந்திகள். துணை முதல்வரின் புகழை கெடுக்க, பொறாமை பிடித்த உள் கட்சியினர் சிலரே கிளப்பும் பொய் புகார்கள் இவை.” என்கிறார்கள்.