வேலூரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பேசிய பேச்சு முதல்வர் எடப்பாடி மற்றும் மூத்த அமைச்சர்களை டென்சனில் ஆழ்த்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. திமுக 38 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. மக்களவையில் சென்ற போதிலிருந்தே ஓபிஎஸ் மகன் பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.  

இந்நிலையில், மக்களவையில் தினமும் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் பேசி வருகிறார். அப்போது, ஜெயலலிதா இருந்தபோது அதிமுக எதிர்த்து வந்த பல்வேறு கொள்கை முடிவுகளை, ரவீந்திரநாத்குமார் ஆதரித்து பேசுகிறார். குறிப்பாக மோட்டார் வாகனச் சட்டம், முத்தலாக் சட்டம் ஆகியவற்றில் அதிமுகவின் கொள்கைக்கு எதிராக பேசி வருகிறார். அவர் என்ன பேச வேண்டும், அதிமுகவின் கொள்கை என்ன என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர் ஆலோசிப்பதே இல்லையாம். எதுவாக இருந்தாலும் தன்னிச்சையாக முடிவு எடுத்து பேசி வருகிறாராம். அவரது பேச்சை தயாரிக்க 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளாராம். அவர்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே படிக்கிறாராம்.

 

அவர் அந்த அறிக்கையில் உள்ள தகவல்களின் உள்ளர்த்தம் தெரிந்து படிக்கிறாரா, தெரியாமல் படிக்கிறாரா என்று அதிமுக மூத்த தலைவர்களே குழம்பி போய் உள்ளார்களாம். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆதரவளர்கள் புலம்பி தள்ளியுள்ளனர். அவருக்கு எப்படி கடிவாளம் போடலாம் என்று தீவிரமாக முதல்வர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.  

மேலும், டெல்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தில் திமுக எம்.பி.க்கள் மற்றும் அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கியுள்ளனர். புது தமிழ்நாடு இல்லத்தில் ரவீந்திரநாத்குமார் மட்டுமே தங்கியுள்ளார். அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்களுடனும் பேசுவதில்லையாம். ஒன்றாக சேருவதில்லையாம். பாஜக எம்.பி.க்களுடன்தான் சேர்ந்து சுற்றுகிறாராம். 

மக்களவையிலும் பாஜக என்ன நினைக்கிறதோ, எந்த திட்டம் கொண்டு வருகிறதோ அதை ஆதரித்து பேசுகிறாராம். அவர் முழுமையான பாஜக எம்.பி.யாகவே மாறிவிட்டாராம். இதுகுறித்து எடப்பாடிக்கு புகார்கள் சென்றதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் தீவிர ஆலோசனை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவுக்கு முழுமையாக அதிமுக ரவீந்திரநாத் குமார் பேசியது யாருக்கு அதிர்ச்சியாக இருந்ததோ தெரியாது ஆனால் ஏசிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சக்கட்ட பனிப்போர் நிலவு வருவது வெட்ட வெளிச்சாகியுள்ளது.