பாரம்பரிய கடல் எல்லையை விரிவுபடுத்த பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது மணிமண்டபம் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பில் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்துல் கலாமின் மணிமண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் டெல்லிக்கு திரும்பினார். அப்போது மதுரை விமான நிலையம் வந்த அவரை, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆதரவு எம்.பி.க்களுடன் சந்தித்தார். பிரதமர் மோடியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பிரதமர் மோடியிடம், பாரம்பரிய கடல் எல்லையை விரிவுபடுத்த வேண்டுகோள் வைத்ததாக கூறினார். கச்சத்தீவை இந்திய மீன்பிடி எல்லைக்குள் கொண்டு வர மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாடுபட்டார் என்றும் மீன்பிடி எல்லையை விரிவுபடுத்துவதற்கான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சனைகளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக கூறினார். மேலும், ராமேஸ்வரம் - அயோத்தி ரயில் சேவையை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததாக அவர் கூறினார். கச்சத்தீவை தாரைவார்த்ததால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதாகவும் ஓ.பி.எஸ். கூறினார்.