கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, முரசொலி படித்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் படித்தால் அவர்களை அறிவாளிகள் என்பார்கள் என்று தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்து தமிழக அரசியலில் வழக்கம் போல் பரபரப்பை ஏற்படுத்தியது. முரசொலி படிப்பவன் தன்மானம் மிக்கவன் என்று திமுக தரப்பில் இருந்து பதில் கொடுக்கப்பட்டது. இதே போல் துக்ளக் படித்தால் அவர்கள் அய்யர்கள் என்றும் திமுகவினர் பிரச்சாரம் செய்தார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முரசொலி படிப்பவர்கள் திமுக காரர்கள் தான் என்றும் ரஜினி கூறியது சரி தான். இதில் பிரச்சனை செய்ய என்ன இருக்கிறது என்று கூறினார். இதே போல் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் இந்த விவகாரம் குறித்து பேசினார்.

முரசொலி படிப்பவர்கள் குறித்து என்னால் பதில் கூற முடியாது, ஆனால் நான் சிறுவயது முதலே துக்ளக் படிக்கிறேன். அந்த வகையில் துக்ளக் படிப்பவர்கள் அறிவாளி என்று கூறிய ரஜினியின் கருத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று பாண்டியராஜன் தெரிவித்தார். இதன் மூலம் துக்ளக் விவகாரத்தில் ரஜினிக்கு அதிமுக அமைச்சர் ஆதரவு என்கிற தகவல் வேகமாக பரவியது. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த தகவல் சென்றுள்ளது. உடனடியாக அந்த அமைச்சரை தொடர்பு கொண்டு ரஜினிக்கு ஆதரவாக ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ரஜினிக்கு ஆதரவாக பேசவில்லை, துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்று கூறியதை ஒப்புக் கொள்கிறேன் என்று தான் கூறினேன் என பதில் அளித்துள்ளார். இதற்கு பேசுவதை ஊடகங்கள் ட்விஸ்ட் பண்ணுவார்கள் எனவே ரஜினி குறித்து எதுவும் பேசாமல் இருப்பது நல்லது என்று அந்த அமைச்சரிடம் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதோடு மட்டும் அல்லாமல் அதிமுக நிர்வாகிகளுக்கும் ரஜினி குறித்து சாதகமாகவோ அல்லது எதிராகவோ எதுவும் தற்போதைக்கு பேச வேண்டாம் என்று எடப்பாடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஜினிக்கு தேவையில்லாமல் அதிமுகவே வெளிச்சம் போட்டுத் தருவதை அவர் விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். மேலும் ரஜினி என்ன பேசினாலும் செய்தியாகும் நிலையில் அதற்கு கருத்து தெரிவித்து தேவையில்லாமல் அதிமுகவினர் நேரத்தை விரயமாக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.