palanisamy consult with dhanapal about assembly session

வரும் ஜனவரி 8ம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு ஒருமுறை சட்டசபை கூட வேண்டும். கடந்த ஜூன் மாதம் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து வரும் ஜனவரி 8ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக சட்டசபை செயலர் பூபதி அறிவித்துள்ளார்.

அதிமுகவை எதிர்த்து ஆர்.கே.நகரில் அபார வெற்றி பெற்றுள்ள தினகரன், முதல்முறையாக சட்டசபைக்குள் செல்கிறார். ஏற்கனவே வலுவான எதிர்க்கட்சியாக திகழும் திமுக, முதல்வர் பழனிசாமி அரசுக்கு சவாலாக திகழும் நிலையில், தினகரனும் சட்டசபைக்குள் நுழைகிறார். எனவே ஆட்சியாளர்களுக்கு கூடுதல் சவாலாகவே தினகரன் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.

அதிமுக அரசின் மீதும் ஓகி புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசின் செயல்பாடு குறித்தும் திமுக மட்டுமின்றி தினகரனும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார். பொதுவெளியில் பல்வேறு கேள்விகளை முன்வைத்து அரசை கடுமையாக விமர்சித்த தினகரன் சட்டசபையிலும் அரசுக்கு எதிரான தனது குரலை ஓங்கி ஒலிப்பார் என்றே தெரிகிறது.

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் அதிமுக அரசு தப்பித்தது என்றே கூறலாம். இல்லையெனில், திமுக, தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களின் எதிர்ப்பு குரல் சட்டசபையில் எழுந்தால், அதை சமாளிப்பது ஆட்சியாளர்களுக்கு சற்று கூடுதல் சவாலாகவே இருந்திருக்கும்.

தற்போதும் கூட திமுகவின் எதிர்ப்புக்குரலோடு தினகரனின் குரலும் ஒலிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சட்டசபையில் அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளிப்பது, சபாநாயகரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பன தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.