palanisamy avoid panneerselvam in madurai function

மதுரையில் நடந்த முப்பெரும் விழாவிற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கவில்லை என கட்சியின் ஐடி பிரிவு ஆஸ்பயர் சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். 

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ்-ன் தலைமையில் தனி அணி செயல்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து ஓரங்கட்டிவிட்டு பன்னீர்செல்வம் அணியும் பழனிசாமி அணியும் இணைந்தது.

இணைந்த மாத்திரத்தில், தாங்கள் தான் உண்மையான அதிமுக என காட்ட பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில், சசிகலா, தினகரன் ஆகியோரது கட்சி பதவிகளை ரத்து செய்தும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகியோரையும் நியமித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த கட்டமாக தங்கள் அணிக்கு, இரட்டை இலையை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை நாடினர். தினகரனின் கோரிக்கையையும் ஏற்ற தேர்தல் ஆணையம், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து இருதரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்து, அமைப்பு ரீதியாகவும் சட்டப்பேரவையிலும் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கியது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்தாலும் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்பட்டது. அண்மையில் மைத்ரேயன் எம்பியின் முகநூல் பதிவு, அதை உறுதிப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ்-க்கு ஆட்சியில் போதிய அதிகாரம் வழங்கப்படுவதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

இரு அணிகளும் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இணைந்தன. அவற்றில், முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று, கட்சி ஓபிஎஸ்-க்கு, ஆட்சி இபிஎஸ்-க்கு என்பது. ஆட்சியில் முழு அதிகாரத்தையும் இபிஎஸ் சுவைத்து வருகிறார். ஆனால், கட்சியில் ஓபிஎஸ்-க்கு அவ்வளவு அதிகாரம் இல்லை என்றே கூறப்படுகிறது. கூட்டுத்தலைமையில் கட்சி இயங்கினாலும் ஒருங்கிணைப்பாளருக்கான எந்த அதிகாரமும் ஓபிஎஸ்-க்கான மரியாதையும் வழங்கப்படுவதில்லை என்றே கூறப்பட்டு வந்தது.

அதை உண்மையாக்கும் வகையில், மதுரையில் நடந்த முப்பெரும் விழாவில் ஓபிஎஸ் கலந்துகொள்ளவில்லை. இரட்டை இலையை பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. 100 அடி உயர கம்பத்தில் கட்சியின் கொடியை முதல்வர் பழனிசாமி ஏற்றிவைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில், ஓபிஎஸ் கலந்துகொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த முப்பெரும் விழா நடந்த விஷயமே ஓபிஎஸ்க்கு தெரியாது என அவரது ஆதரவாளரும் கட்சியின் ஐடி பிரிவை சேர்ந்தவருமான ஆஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் முப்பெரும் விழா அழைப்பிதழில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்-சின் பெயர் இடம்பெறவில்லை. இந்த விழா தொடர்பாக அவரிடம் தெரிவிக்ககூட கிடையாது. மதுரையில் முப்பெரும் விழா நடக்கும் விஷயமே ஓபிஎஸ்-க்கு தெரியவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளரை கலந்தாலோசிக்காமல், அவரது பெயரை அழைப்பிதழில் போடாமல், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அழைக்காமல், இந்த விழா நடைபெற்றுள்ளது. அதிமுகவின் வரலாற்றில் இப்படியான ஒரு விழா நடந்ததில்லை. ஓபிஎஸ்-க்கு மரியாதை அளிக்கப்படாத சம்பவம், அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என ஆஸ்பயர் சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் பெயரளவில் இணைந்து இருந்தாலும், அவர்களுக்குள் நடக்கும் பனிப்போர் வலுத்துக்கொண்டே இருக்கிறது. அதனால், தர்மயுத்தத்தை ஓபிஎஸ் மீண்டும் தொடங்குவார் என்றே கூறப்படுகிறது. தர்மயுத்தத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவதற்கான காரணங்கள் வலுத்துக்கொண்டே இருப்பதால் விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-இபிஎஸ் அணியில் ஏற்பட்டுள்ள விரிசலால், தினகரனும் அவரது ஆதரவாளர்களும் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.