ஜெயலலிதா அறிவித்தபடி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே விரைவில் அணை கட்டப்படும் என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். 

காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகாமானோர் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டம் பவானி, கருங்கல் பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். முதலாவதாக இன்று காலை ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம் மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். 

பவானி சந்தையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பவானி மற்றும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என உறுதியளித்தார். 

கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர்-குமாரமங்களம் பகுதியில் தடுப்பணை கட்டப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதற்காக ரூ.400 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அந்த அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக பட்டாதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் உடனடியாக அணை கட்டப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.